திவிநெகும நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
திவிநெகும நிதியத்துக்குச் சொந்தமான 33 மில்லியன் ரூபாவை, கடந்த அதிபர் தேர்தல் காலத்தில் கூரைத் தகடுகளை வழங்க பசில் ராஜபக்ச முறைகேடாகப் பயன்படுத்தியதாக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ச மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலர் நிகால் ஜெயதிலக, மற்றும் கீத்சிறி ரணவக்க, பந்துல திலகசிறி ஆகியோருக்கு எதிராகவே குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பசில் ராஜபக்ச உள்ளிட்ட நால்வரினதும் குற்றப்பத்திரங்களை கையளித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நிசந்த பந்துல கருணாரத்ன, இந்த வழக்குத் தொடர்பான விசாரணைகளை ஓகஸ்ட் 30ஆம் நாளுக்கு ஒத்திவைத்தார்.