காணாமற் போனோர் தொடர்பாக விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகமவினால் கடந்த வாரம் விடுக்கப்பட்ட அறிக்கையானது போர்க் காலத்தில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் புதியதொரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்ஸ்வெல்லின் அறிக்கையானது மனித உரிமை அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரின் கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் கொத்தணிக் குண்டுகள் குற்றச்சாட்டு தொடர்பான மக்ஸ்வெல்லின் கருத்தானது ‘இவரது அதிமேதவித்தனத்தையே’ காண்பிப்பதாக வெளிவிவகார அமைச்சர் குற்றம் சுமத்தியிருந்தார்.
2010 இற்கு முன்னர் சிறிலங்கா இராணுவத்தால் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அது தவறல்ல எனவும், இது சட்டத்திற்கு முரணான விடயமல்ல எனவும் மக்ஸ்வெல் குறிப்பிட்டிருந்தார்.
கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்படுவது சட்டவிரோதமானது என்கின்ற பிரகடனமானது ஆகஸ்ட் 1, 2010 இலேயே நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் அதற்கு முன்னர் இவ்வகையான ஆயுதங்களுக்கு எவ்வித தடையும் இடப்படவில்லை எனவும் மக்ஸ்வெல் சுட்டிக்காட்டியிருந்தார்.
‘ஆகவே சிறிலங்கா இராணுவமானது தனது இராணுவத் தேவைக்காக 2010 இற்கு முன்னர் நிறைவடைந்த உள்நாட்டு யுத்தத்தின் போது கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தால் அது சட்டவிரோதமான செயல் அல்ல’ எனவும் மக்ஸ்வெல் குறிப்பிட்டிருந்தார்.
‘சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் போது கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்படுவது தொடர்பில் தடைவிதிக்கப்பட்டிருக்கா விட்டாலும் கூட, போர்ச் சட்டங்களின் பிரகாரம் இத்தகைய ஆயுதங்களின் பயன்பாடு சட்டவிரோதமானதாகும்’ என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய இயக்குனர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதை நியாயப்படுத்தி நீதிபதி மக்ஸ்வெல் பரணகம வெளியிட்ட கருத்துக்கள் ஆச்சரியமளிக்கின்ற அதேவேளையில் குழப்பத்தை உண்டுபண்ணுவதாகவும் அனைத்துலக நெருக்கடிகள் குழுவின் சிறிலங்காவிற்கான மூத்த ஆய்வாளர் அலன் கீனன் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘நீதிபதி பரணகம கொத்தணிக் குண்டுகள் தொடர்பான கருத்துக்களைக் கூறியதன் மூலம் நேரடியாக சிறிலங்காவின் அரசியலில் தலையீடு செய்வது போல் தென்படுகின்ற அதேவேளையில், இவரால் தலைமை தாங்கப்படும் சுயாதீன விசாரணை ஆணைக்குழு மீதான நம்பகத்தன்மை தொடர்பில் முரண்பாட்டைத் தோற்றுவித்துள்ளது’ என அலன் கீனன் குறிப்பிட்டுள்ளார்.
‘பரணகமவின் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பான கருத்துக்களானது ஒருபுறம் அதிர்ச்சியையும் மறுபுறம் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது இவரது இந்தக் கருத்துக்கள் மிக மோசமான சட்டரீதியான தவறான புரிந்துணர்வை அடிப்படையாகக் கொண்டுள்ளதைச் சுட்டிநிற்கின்றது. இது உண்மையில் ஆச்சரியமான விடயமாகும்.
சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வரும் வரை கொத்தணிக்குண்டுகள் அனைத்துலக ரீதியில் தடைசெய்யப்பட்டமை தொடர்பான சாசனம் பிரகடனப்படுத்தப்படவில்லை. ஆனால் சிறிலங்காப் போரின் போது இக்கொத்தணிக் குண்டுகள் அடிப்படை மனிதாபிமானச் சட்ட நடைமுறைகளை மீறாது பயன்படுத்தப்பட்டிருந்தால் அது சர்ச்சைக்குரிய விடயமாக இருந்திருக்காது.
அதாவது இக்குண்டுகளைப் பயன்படுத்தும் போது பொதுமக்களுக்கு எவ்வித சேதமும் ஏற்பட்டிருக்கக் கூடாது. ஆனால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த ‘போர்த் தவிர்ப்பு வலயத்தை’ இலக்கு வைத்து கொத்தணிக் குண்டுகள் வீசப்பட்டிருக்கவில்லை எனில் அது சட்டத்திற்கு முரனாணது அல்ல’ என அலன் கீனன் குறிப்பிட்டுள்ளார்.
கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதை உறுதிப்படுத்துவதற்கான எவ்வித சாட்சியமும் காணப்படவில்லை என நீதிபதி பரணகம தெரிவித்த கருத்தானது ஆச்சரியமளிப்பதாகவும், கடந்த மாதம் ‘கார்டியன்’ பத்திரிகையில் வெளியிடப்பட்ட கண்ணிவெடி அகற்றும் வல்லுனர்கள் மற்றும் போரிலிருந்து மீண்ட பொதுமக்கள் அண்மையில் அளித்த புதிய சாட்சியங்கள் தொடர்பாக பரணகம தனது அறிக்கையில் குறிப்பிடவில்லை என்பது மிகவும் ஆச்சரியமளிப்பதாகவும் அலன் கீனன் மேலும் தெரிவித்துள்ளார்.
‘இச்சாட்சியங்கள் இன்னமும் நீதிமன்றில் கையளிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்படாது விட்டாலும் கூட, நீதிபதியான பரணகம இந்தச் சாட்சியங்களைத் தனது கவனத்திற் கொள்ளாமையானது சுயாதீன மற்றும் பாரபட்சமற்ற ரீதியில் செயற்பட வேண்டிய இவரது நடவடிக்கைகள் தொடர்பில் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது’ என அலன் கீனன் சுட்டிக்காட்டியுள்ளார்.
போரின் போது கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்பதை உறுதிப்படுத்துவதற்கான சுயாதீன மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ளுமாறு அண்மையில் மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர் ஆணையாளர் கோரிக்கை விடுத்திருந்தார்.
‘சிறிலங்கா இராணுவமானது யுத்தத்தின் போது கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தது என்பதை உறுதிப்படுத்துவதற்கான எவ்வித நம்பகமான சாட்சியமும் இல்லை என்பதை பரணகம ஆணைக்குழுவின் இரண்டாவது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது’ என பரணகம தெரிவித்திருந்தார்.
யுத்தம் முடிவடைந்து மூன்று ஆண்டுகளின் பின்னர் ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கண்ணிவெடியகற்றும் பிரிவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரின் இரகசிய மின்னஞ்சலில் சிறிலங்காப் போரின் போது கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதை உறுதிப்படுத்துவதற்கான ‘சில சாட்சியங்கள்’ உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டதாக பரணகம தெரிவித்தார். ‘இவ்வாறான குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்கின்ற குற்றச்சாட்டை சிறிலங்கா இராணுவம் மறுத்துள்ளது. அந்த நேரத்தில் இந்த அறிவித்தலை ஐக்கிய நாடுகள் சபையும் ஏற்றுக் கொண்டிருந்தது’ என பரணகம குறிப்பிட்டார்.
‘மக்ஸ்வெல் பரணகம இத்தகையதொரு அறிக்கையை வெளியிட்டமை தொடர்பில் நான் அதிருப்தியடைகிறேன். இவ்வாறானதொரு அறிக்கையானது ஒருபோதும் நல்லணிக்கத்தை ஏற்படுத்த உதவாது’ என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார். போரின் போது கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டனவா என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கான ஏற்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்வதாகவும் இவ்வாறானதொரு விசாரணையை மேற்கொள்ளாது இது தொடர்பாக எவ்வித கருத்தையும் முன்வைக்க முடியாது எனவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் கார்டியன் பத்திரிகையில் சிறிலங்கா போரின் போது கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதை உறுதிப்படுத்தும் ஒளிப்படங்கள் வெளியிடப்பட்டதானது சிறிலங்கா இராணுவமானது இவ்வகையான குண்டுகளை பொதுமக்களை இலக்கு வைத்து மேற்கொண்டனவா என்கின்ற சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது. 2008ன் பிற்பகுதி மற்றும் 2009ன் முற்பகுதியில் யுத்தம் இடம்பெற்ற பிரதேசத்தில் கண்ணிவெடியகற்றும் குழுவினரால் கொத்தணிக் குண்டுகள் மீட்டெடுக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் புதிய சாட்சியங்களை கார்டியன் வெளியிட்டிருந்தது.
இவ்வகையான குண்டுகளை சிறிலங்கா அரசாங்கத்தால் பிரகடனப்பட்டிருந்த ‘போர்த் தவிர்ப்பு வலயத்திலிருந்தே’ அதிகளவில் மீட்டெடுத்ததாக கண்ணிவெடியகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த சிலரின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போர்த் தவிர்ப்பு வலயத்தில் தமது உயிரைப் பாதுகாப்பதற்காக 300,000 வரையான பொதுமக்கள் அடைக்கலமாகியிருந்தனர் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கதே.
உலகின் மிகப் பாரிய கண்ணிவெடியகற்றும் நிறுவனமான ‘ஹலோ ட்ரஸ்ட்’ நிறுவனத்தைச் சேர்ந்த முன்னாள் பணியாளர் ஒருவரே கொத்தணிக் குண்டுகள் தொடர்பான ஒளிப்படங்களை கார்டியன் பத்திரிகையிடம் வழங்கியிருந்தார். இந்த ஒளிப்படங்களில் ‘ஹலோ ட்ரஸ்ட்’ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் கண்ணிவெடி அகற்றும் போது மிகப் பெரிய எறிகணை மற்றும் கொத்தணிக் குண்டுகள் போன்றன வெவ்வேறு இடங்களில் மீட்டெடுக்கப்பட்டதைக் காணலாம்.
இந்த ஒளிப்படங்களில் காணப்படும் கொத்தணிக் குண்டுகள் ரஸ்யத் தயாரிப்புக் குண்டுகள் என்பதை மனித உரிமைகள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த மூத்த ஆயுத ஆராய்ச்சியாளரால் அடையாளங் காணப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது.
சிறிலங்காவின் முன்னைய அரசாங்கமானது யுத்தம் தொடர்பான எவ்வித குற்றச்சாட்டுக்களையும் மறுத்து வந்ததாகவும் ஆனால் தற்போதைய அரசாங்கமானது இது தொடர்பான வேறுபட்ட கோட்பாட்டைப் பிரகடனப்படுத்தி வருவதாகவும் சமரவீர தெரிவித்தார்.
பரிந்துரைக்கப்பட்டுள்ள உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவானது சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் எனவும் சமரவீர தெரிவித்தார். இத்தகைய உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவானது நாட்டின் அனைத்து பங்குதாரர்களுடனும் ஆலோசனை நடத்திய பின்னர் இவ்வாண்டு இறுதிக்குள் உருவாக்கப்படும் எனவும் வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.
போரின் போது இராணுவக் கட்டளை நிலை அதிகாரிகளால் வழங்கப்பட்ட கட்டளைச் சங்கிலியானது மனித உரிமை மீறல்களுக்கு வழவகுத்ததா என்பதை உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு விசாரிக்கும் எனவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.
உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைக்கான அனைத்து நடவடிக்கைகளும் அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் தயாராக வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அனைத்துலக சமூகத்தின் ஆதரவையும் சிறிலங்கா வரவேற்கும் எனவும் இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு முன்னர் அனைத்துத் தெரிவுகளையும் அரசாங்கம் தனது கவனத்தில் எடுத்துக் கொள்ளும் எனவும் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.
2009ல் யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் கூட, நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதில் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் ஆனால் தற்போதைய அரசாங்கமானது நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதாகவும் சமரவீர தெரிவித்தார்.
தற்போது சிறிலங்கா அனைத்துலக சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுத்துள்ளதாகவும் அண்மையில் ஜெனீவாவில் நிறைவுற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரின் போது சிறிலங்கா பெற்றுக் கொண்ட ஆதரவானது இதற்குச் சான்று பகர்வதாகவும் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வழிமூலம் – The Sunday Leader
ஆங்கிலத்தில் – Easwaran Rutnam
மொழியாக்கம் – நித்தியபாரதி