சிறிலங்காவில் திரவ இயற்கை எரிவாயு முனையம் ஒன்றை நிறுவும் முயற்சிகளில் இந்தியாவின் பெட்ரோநெட் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக, அந்த நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரபாத் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியைத் தளமாக கொண்ட பெட்ரோநெட் நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு நிறுவனமாகும்.
சிறிலங்காவில் ஒரு மில்லியன் தொன் முனையம் ஒன்றை உருவாக்கும் திட்டம் ஒன்றை தாம் முன்மொழிந்திருப்பதாக, பெட்ரோநெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரபாத் சிங் தெரிவித்துள்ளார்.
பெட்ரோநெட் நிறுவனம், சிறிலங்காவில் திரவ இயற்கை எரிவாயு முனையம் ஒன்றை அமைப்பதற்கு இந்திய அரசாங்கம் இராஜதந்திர அழுத்தங்களைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, பினான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 4ஆம் நாள், புதுடெல்லியில் சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவை இந்தியாவின் பெற்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
சிறிலங்காவுடன் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் ஒத்துழைப்பை விரிவாக்குவது தொடர்பாக விரிவாக கலந்துரையாடியதாக தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார்.