Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » திருகோணமலை – மதவாச்சி இடையே புதிய தொடருந்து வழித்தடம் – இந்தியா ஆர்வம்

திருகோணமலை – மதவாச்சி இடையே புதிய தொடருந்து வழித்தடம் – இந்தியா ஆர்வம்

திருகோணமலையில் இருந்து மதவாச்சிக்கு புதிய தொடருந்து வழித்தடம் ஒன்றை உருவாக்குவதில், இந்தியா ஆர்வம் கொண்டிருப்பதாக, பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம நேற்று, சிறிலங்காவின் தொடருந்து வலையமைப்பை அபிவிருத்தி செய்வது தொடர்பாக இந்திய அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தினார்.

இந்தியாவின் தொடருந்து துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹாவுடன் நடத்திய பேச்சுக்களின் போது, சிறிலங்காவின் தொடருந்து பாதைகளின் சமிக்ஞை மற்றும் தொடர்பாடல் கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுக்களில் இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் தொடருந்து துறை மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு சிறிலங்காவுக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது, 318 மில்லியன் டொலர் பெறுமதியான தொடருந்து கடன்திட்டம் ஒன்றை அறிவித்திருந்தார்.

இந்த கடன்திட்டத்தை, ஆறு டீசல் அலகுகளையும், ஒவ்வொன்றும் இரண்டு கார்களை உள்ளடக்கிய 12 பேட்டிகள், 160 பயணிகள் பெட்டிகள், 160 கி.மீ தொடருந்துப் பாதை புனரமைப்பு என்பனவற்றுக்குப் பயன்படுத்த சிறிலங்கா திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, 300 மில்லியன் டொலர் செலவில், திருகோணமலை- மதவாச்சி இடையே புதிய தொடருந்து வழித்தடம் ஒன்றை உருவாக்க இந்தியா விருப்பம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, நேற்றைய பேச்சுக்களின் போது ஆராயப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரையில் சிறிலங்காவில் பல்வேறு தொடருந்து திட்டங்களுக்காக இந்தியா 1 பில்லியன் டொலருக்கும் அதிகமான கடனுதவியை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *