கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணம் முழுவதையும் உள்ளடக்கி 15 ஆண்டுகள் இலக்குடன் 44 பில்லியன் அமெரிக்க டொலரில் மேற்கொள்ளும் பெருநகர அபிவிருத்தித் திட்டத்திற்குள் இந்தியாவின் உயர் மட்ட நிறுவனங்களான டாடாஸ் (Tatas) மற்றும் இன்போசிஸ் (Infosys) ஆகியவற்றை உள்ளீர்க்க சிறிலங்கா விருப்பம் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவின் பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, ‘டாடாஸ் ஏற்கனவே இங்கு செயற்படுகின்றது. இந்திய வர்த்தக சம்மேளனங்கள் மற்றும் தொழிற்றுறை சம்மேளனங்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு இந்திய அரசாங்கத்திடம் நாங்கள் கோரியுள்ளோம்.
ஏற்கனவே நாங்கள் தென்கொரியா மற்றும் ஜேர்மனியுடன் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளோம். இது தொடர்பில் நல்லதொரு பதிலை நாம் பெற்றுள்ளோம். இதேபோன்று வெகுவிரைவில் இந்தியாவுடனும் எனது அதிகாரிகள் பேச்சுக்களை நடத்துவார்கள்’ எனத் தெரிவித்தார்.
‘ஜேர்மன் நாட்டின் வர்த்தகப் பிரதிநிதிகள் குழு சிறிலங்காவிற்குப் பயணம் செய்ததுடன் எம்முடன் தமது தொழினுட்ப அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கான ஆர்வத்தையும் வெளிப்படுத்தியது. ஜேர்மனின் சீமன்ஸ் நிறுவனம் போன்ற பல பிரபல நிறுவனங்களும் இதில் கலந்து கொண்டிருந்தன.
தென்கொரியாவின் ஹுண்டாய் போன்ற பல நிறுவனங்கள் ஏற்கனவே சிறிலங்காவில் தமது பணிகளை விரிவுபடுத்தியுள்ளன. இதேபோன்று சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் சீன நிறுவனங்களும் தமது பணிகளை சிறிலங்காவில் விரிவுபடுத்தியுள்ளன.
நீர் முகாமைத்துவத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கான சாதக பாதகங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக தென்கொரியாவின் நீர் வளமுகாமைத்துவ அமைச்சர் சிறிலங்காவிற்கு வருகை தந்திருந்தார்’ என சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார்.
மேல் மாகாணத்தில் 100,000 வரையான குடிசை வீடுகள் உள்ளன எனவும் இவற்றுள் 68,000 குடிசை வீடுகள் கொழும்பு நகரத்தில் உள்ளதாகவும் இக்குடிசை வீடுகளுக்குப் பதிலாக பெரிய வீடுகளை நிர்மாணிக்க வேண்டிய தேவையுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இது அவ்வளவு இலகுவான காரியமல்ல எனவும் இதற்கான வாய்ப்புக்கள் தொடர்பாக ஆராய்ந்து முகாமைத்துவக் கட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டிய தேவையுள்ளதாகவும் ரணவக்க சுட்டிக்காட்டினார்.
பெருநகரத் திட்டமானது நாடாளுமன்றின் அனுமதி பெறப்பட்ட பின்னர் பொது மற்றும் தனியார் பங்களிப்புக்களுடன் 15 ஆண்டுகளுக்குள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
‘லண்டன் மற்றும் டுபாய் போன்ற நாடுகளிலுள்ள பாரிய வர்த்தக மற்றும் நிதி நிறுவகங்கள் எமது நாட்டில் தமது கிளைகளை உருவாக்குவதற்கான உந்துதலை நாங்கள் வழங்குவதன் மூலம் கொழும்பை நிதி மற்றும் கேந்திர மையமாக உருவாக்க முடியும்’ எனவும் ரணவக்க சுட்டிக்காட்டினார்.