சுற்றுலா ஊக்குவிப்புத் தொடர்பாக இந்தியாவின் ஆந்திரப்ப பிரதேச மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன், சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய கொள்கைகள் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம சீனாவில் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, நான்கு நாள் பயணமாக சீனா சென்றுள்ளார். சிறிலங்கா அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும் சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இவர்கள் இருவரும், நேற்று தியான்ஜின் நகரில் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.
இந்தச் சந்திப்பின் போது, ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதி கட்டுமானப் பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து விசாரித்த சிறிலங்கா அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, சிறிலங்கா பிரதமரின் சார்பில் வாழ்த்துக்களையும் பரிமாறினார்.
அத்துடன் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு சந்திரபாபு நாயுடுவுக்கும் மலிக் சமரவிக்கிரம அழைப்பு விடுத்தார்.
இந்தச் சந்திப்பில் இரு அரசாங்கங்களும், சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு தொடர்பாக இணைந்து பணியாற்றவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.