ஜப்பானுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, நரிடா விமான நிலையத்தில் உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பத்து நாள் பயணமாக ஜப்பான் சென்றிருந்த மகிந்த ராஜபக்ச, கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு திரும்பினார்.
கொழும்பு திரும்புவதற்காக ரோக்கியோவின் நரிடா விமான நிலையத்துக்குச் சென்ற மகிந்த ராஜபக்சவை, இரண்டாவது முனையத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரி குண்டுகள் மற்றும் உலோகப் பொருட்களைக் கண்டுபிடிக்கும் கருவியைக் கொண்டு உடல் பரிசோதனையை மேற்கொண்டார்.
முன்னர், சிறிலங்கா பிரதமராக இருந்த ரட்ணசிறி விக்கிரமநாயக்க மத நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்கு ஜப்பான் சென்றிருந்த போதும் விமான நிலையத்தில் தடுக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகிந்த ராஜபக்ச ஜப்பானுக்கான தனிப்பட்ட பயணத்தை மேற்கொள்ளும் போது, இராஜதந்திர நெறிமுறை உதவிகளை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சிடம் கோரியிருந்தார்.
எனினும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதற்கு மறுப்புத் தெரிவித்து விட்ட நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலேயே அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.