தென் சீனக்கடல் விவகாரத்தில் தலையீடு செய்வதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.
சீனாவின் சின்ஹூவா செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“பிராந்தியத்தின் அமைதி, பாதுகாப்பு, உறுதிப்பாடு ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கு, தென் சீனக் கடல் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடுகள் நிறுத்தப்பட வேண்டும்.
தனது நட்புநாடுகளுடன் இணைந்து சீனாவை தனிமைப்படுத்துவதையும் அமெரிக்க நிறுத்திக் கொள்ள வேண்டும்.
நாடுகளுக்குள் பிளவுகளை ஏற்படுத்தி, ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் அமைதி, உறுதிப்பாடு, பாதுகாப்பை பலவீனப்படுத்தும் முயற்சிகளையும் அமெரிக்கா நிறுத்த வேண்டும்.
தென் சீனக் கடல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நாடுகள், எவ்வாறு தீர்வு காணலாம் என்று பேச்சுக்களை நடத்தி, ஒருவரின் கருத்தை மற்றவர் செவிமடுக்க வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் தென் சீனக்கடல் விவகாரத்தில் நழுவலான நிலைப்பாட்டையே வகித்து வந்த நிலையில், சிறிலங்கா பாதுகாப்புச் செயலரின் இந்தக் கருத்து, முற்றிலும் சீன சார்பு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.