அவுஸ்ரேலியாவுக்குச் செல்லும் வழியில், படகு பழுதடைந்ததால், இந்தோனேசியாவில் தரைதட்டிய 44 இலங்கைத் தமிழ் அகதிகளையும், மீண்டும் திருப்பி அழைத்துக் கொள்வதற்கு, சிறிலங்கா அரசாங்கம் விருப்பம் வெளியிட்டுள்ளது.
அகதிகள் விரும்பினால், சிறிலங்காவுக்கு திருப்பி அழைத்துக் கொள்ளத் தயாராக இருப்பதாக சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
“ஆச்சே மாகாணத்தில் தங்கியுள்ள அகதிகளைச் சந்திப்பதற்கு, இந்தோனேசிய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக ஜகார்த்தாவில் உள்ள சிறிலங்கா தூதுவர் தகவல் அனுப்பியுள்ளார்.
அகதிகளைச் சந்திப்பதற்கு இன்று மூன்று பேர் கொண்ட தூதரக அதிகாரிகள் குழு செல்கிறது.
அகதிகளில் பலரும் சிறிலங்காவைச் சேர்ந்தவர்கள் ஆனால் நீண்டகாலமாக இந்தியாவில் வசித்தவர்கள்.
தூதரக அதிகாரிகள் மூவரும் இன்று காலை அகதிகளைத் தனித்தனியாகச் சந்தித்து, அவர்களின் அடையாளங்களை உறுதி செய்வர்.
இவர்கள் நாடு திரும்ப விரும்பினால், அனைவரையும், புலம்பெயர்ந்தோருக்கான அனைத்துலக அமைப்பு மற்றும் அகதிகளுக்கான ஐ.நா முகவரமைப்பு ஊடாக திருப்பி அழைத்துக் கொள்வோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.