இறுதிக்கட்டப் போரில் சிறிலங்கா படையினரால் கொத்தணிக் குண்டுகள் வீசப்பட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி கருத்து வெளியிட மறுத்துள்ளார்.
வடக்கில் இறுதிக்கட்டப் போரின் போது சிறிலங்காப் படைகளால் கொத்தணிக் குண்டுகள் வீசப்பட்டதற்கான ஆதாரங்களாக, கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவர் எடுத்திருந்த ஒளிப்படங்களை லண்டனில் இருந்து வெளியாகும் தி கார்டியன் நாளிதழ், நேற்றுமுன்தினம் வெளியிட்டது.
இதுதொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அதிகாரபூர்வ மறுப்பு எதையும் வெளியிடவில்லை.
அதேவேளை, இதுதொடர்பாக ஊடகங்கள் எழுப்பியுள்ள கேள்விக்குப் பதிலளித்துள்ள சி்றிலங்கா பாதுகாப்புச் செயலர்,
“இவ்வாறான செய்திகளின் உண்மைத்தன்மைகள் குறித்து எமக்குத் தெரியாமல், எந்த தீர்மானமும் எடுக்க முடியாது. கொத்தணிக் குண்டுகளை பயன்படுத்த வாய்ப்புகள் இல்லை என ஆரம்பத்தில் இருந்தே பாதுகாப்பை பிரிவினர் தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் இப்போது இத்தகைய செய்திகளை வெளியிடுவதன் பின்னணி என்ன என்பது தொடர்பிலும் ஆராயப்பட வேண்டும்.
அதேபோல சிறிலங்காவில் நடந்த போர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆகவே விசாரணைகளின் மூலம் இவற்றை நாம் ஆராய்ந்து தீர்மானம் எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளை இதுகுறித்து சிறிலங்கா இராணுவ பேச்சாளர் ஜெயநாத் ஜெயவீர கருத்து தெரிவிக்கையில்,
‘கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பாக, அனைத்துலக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. எனினும் இதுவரையில் பாதுகாப்பு தரப்பினருக்கு இந்த விடயங்கள் தொடர்பான அதிகாரபூர்வ அறிக்கைகள் எவையும் கிடைக்கவில்லை.
வெளியிடப்பட்டுள்ள ஒளிப்படங்கள் தொடர்பில் உறுதித்தன்மை இல்லை. ஆகவே இவற்றை உண்மையென எம்மால் கருத முடியாது.
அதேபோல் இப்போது அனைத்துலக தரப்பினர் தமக்கு சாதகமான காரணிகளை முன்வைத்து சிறிலங்காவை அழுத்தத்திற்கு உட்படுத்த முயற்சித்து வருகின்றனர். எனினும் இந்த காரணிகளை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
எக்காரணம் கொண்டும் எமது இராணுவத்தை அனைத்துலக விசாரணைக்கு அனுமதிக்க முடியாது. அரசியல் ரீதியாக சில பொய்யான காரணிகளை முன்வைத்து இராணுவத்தை குற்றவாளியாக்க முயற்சிக்கின்றனர் .
எமது இராணுவம் விதிமுறைகளுக்கு முரணான வகையில் போர் செய்யவில்லை. ஆகவே அரசாங்கமும், பாதுகாப்பு தரப்பும் எப்போதும் எமது இராணுவத்தின் மீதான பொய்யான குற்றச்சாட்டுகளை நிராகரித்தே செயற்படும்’ என்று தெரிவித்துள்ளார்.