இந்தோனேசியாவில் தங்கியுள்ள 44 இலங்கை தமிழ் அகதிகளுக்கும், தேவையான பயண ஆவணங்களைப் பெற்றுக் கொடுக்குமாறு, சிறிலங்கா மற்றும், இந்தியத் தூதரகங்களிடம் இந்தோனேசிய அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
அவுஸ்ரேலியா செல்லும் வழியில் படகு பழுந்தடைந்ததால் இந்தோனேசியாவில் தரைதட்டிய அகதிகள், நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் கடந்த சனிக்கிழமை தரையிறங்க அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள 50 அடி நீளமுள்ள இராணுவக் கூடாரத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள இந்த அகதிகளை தமது நாட்டை விட்டு வெளியேற்றுவதில் இந்தோனேசியா உறுதியாக உள்ளது.
படகைப் பழுதுபார்த்து அகதிகளை மீண்டும் அனைத்துலக கடற்பரப்புக்கு அனுப்பும் திட்டம், இதுவரை வெற்றிபெறவில்லை.
நேற்றுமுன்தினம் பக்கோ இயந்திரத்தின் துணையுடன் படகை கடலுக்குள் தள்ளும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில், இந்தப் படகைத் திருத்த முடியாதிருப்பதால், அகதிகளை மீண்டும் அனைத்துலக கடற்பரப்புக்கு அனுப்பவதற்கு சிறியளவிலான வாய்ப்பு மட்டுமே இருப்பதாக, இந்தோனேசிய குடிவரவுப் பணியக பேச்சாளர் ஹெரு சான்ரோசோ தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அகதிகளுக்கான ஐ.நா முகவரமைப்பு மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான அனைத்துலக அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள், அகதிகளைச் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அகதிகளுக்கு உதவுமாறு இந்தோனேசிய அரசாங்கம், அனைத்துலக அமைப்புகளிடம் கோரியுள்ளது.
அத்துடன் அகதிகளை தமது நாட்டுக் குடிமக்களா என்று உறுதிப்படுத்தி, பயண ஆவணங்களை வழங்குமாறு இந்தோனேசிய அரசாங்கம் சிறிலங்கா மற்றும் இந்தியத் தூதுரகங்களிடம் கோரியுள்ளது.
பயண ஆவணங்களைப் பெற்றால், அவர்கள் தமது நாடுகளுக்குத் திரும்ப முடியும் என்றும் அகதிகள் என்றால் இங்கு தங்கியிருக்கலாம் என்றும் இந்தோனேசிய குடிவரவுப் பணியக பேச்சாளர் ஹெரு சான்ரோசோ தெரிவித்துள்ளார்.
இதற்குச் சாதகமான முறையில் சிறிலங்கா தூதுரகம் பதிலளித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.