சலாவ வெடிவிபத்துக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்.
சலாவ சிறிலங்கா இராணுவ ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறிய சம்பவத்தில், தீவிரவாத தொடர்பு அல்லது சதி ஏதும் இருந்ததாக விசாரணையில் கண்டறியப்படவில்லை என்றும், எனினும், இத்தகைய வாய்ப்புகளை நிராகரிப்பதற்கில்லை என்றும் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
“சலாவ வெடிவிபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. இந்தச் சம்பவத்துக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை.
எனினும், விடுதலைப்புலிகள் அல்லது, ஐஎஸ் தீவிரவாத தொடர்புகள் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படும். நாசவேலைகள் இடம்பெற்றதா என்றும் விசாரிக்கப்படும்.
இந்த விபத்து சதிவேலையால் அல்லது வேறு காரணங்களால் ஏற்பட்டிருக்கலாம். எதையும் இப்போது உறுதி செய்ய முடியாது. ஆனால் நாம் திறந்த மனோநிலையில் இருக்கிறோம்.
சதிவேலை என்பதற்கான எந்த தகவலோ ஆதாரமோ கிடைக்கவில்லை. அதுபற்றிய செய்திகள் அனைத்தும் வதந்தியே.
இந்த ஆயுதக் கிடங்கில் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருக்கவில்லை. அவை அனைத்தும் இராணுவத்தினரின் வெடிபொருட்கள் தான்.
இந்த விபத்தில் அழிந்து போன வெடிபொருட்களின் பெறுமதி தொடர்பான அறிக்கை இன்னமும் கிடைக்கவில்லை.
ஆயுதக்கிடங்கில் இருந்த வெடிபொருட்கள் காலாவதியானவையா மீள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தவையா என்பது பற்றிய தகவல் எனக்கு இன்னமும் கிடைக்கவில்லை. அதனை இராணுவத்தளபதியிடம் தான் பெற வேண்டும். பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்த விபரங்களை அவர்கள் ஊடகங்களுக்கு வழங்காமல் விடக் கூடும்.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளுக்கு வெளிநாட்டு நிபுணர்களின் உதவியை இதுவரை பெற்றுக் கொள்ளவில்லை.
எனக்குத் தெரிந்த வகையில் சலாவ முகாமில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 50 வீதமான வெடிபொருட்கள் இன்னொரு இடத்துக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் தான் வெடிப்பு நிகழ்ந்திருக்கிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.