தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு இந்திய சட்டத்தில் இடமில்லை என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள இந்திய அதிகாரி ஒருவர்,
‘தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க முடியாது. ஏனென்றால் இரட்டைக் குடியுரிமையை இந்தியா அங்கீகரிக்கவில்லை.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்ற பிரிவை மட்டும் இந்தியா கொண்டிருக்கிறது. இது பல்வேறு நாடுகளிலும் அந்த நாட்டுக் குடியுரிமையைப் பெற்ற வாழும், இந்திய வம்சாவளியினருக்கு மட்டும் இந்த அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படும்.
வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் தான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதை ஆவண ரீதியாக நிரூபிக்க வேண்டும். இலங்கைத் தமிழர்கள் இந்திய வம்சாவளியினர் அல்ல.
எனவே, தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக இருந்தால், இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு ஏற்ற வகையில் இந்தியாவின் குடியுரிமைச் சட்டம் திருத்தப்பட வேண்டும். அது ஒரு நீண்ட பணி.” என்றும் இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.