முப்பதாண்டு காலப் போரினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு, சீனா உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக, சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ்ப்பாணத்துக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த சீனத் தூதுவர், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே, யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போது, வடக்கிற்கு உதவ சீனா தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஆற்றலுக்கேற்ப, சிறிலங்காவுக்கு குறிப்பாக வடக்கு மாகாணத்துக்கு உதவத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கிலுள்ள மாணவர்களின் கல்வி நிலையை மேம்படுத்துவதில் சீனத் தூதரகம் கவனம் செலுத்தி வருவதாகவும் சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் உள்ள சிறுவர்களுக்கு, புலமைப்பரிசில்களை வழங்குவது குறித்தும் சீனா கவனத்தில் கொள்ளும் என்றும், அவர் கூறியுள்ளார்.