44 இலங்கைத் தமிழ் அகதிகளுடன், இந்தோனேசியக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த படகு, அவுஸ்ரேலியா நோக்கிப் புறப்பட்டுச் சென்ற போதும், மீண்டும் அச்சே பகுதிக்குத் திரும்பி வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு கர்ப்பிணி உள்ளிட்ட 15 பெண்கள், ஒன்பது சிறுவர்கள் உள்ளிட்ட 44 பேருடன் இந்தியாவில் இருந்து புறப்பட்ட அகதிகள் படகு, இயந்திரக் கோளாறினால், இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தின், லொஹொக்கா கடற்கரைப் பகுதியில் கடந்த சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
படகில் இருந்தவர்களிடம் எந்த ஆவணங்களும் இல்லாத நிலையில் அவர்களை தரையிறங்க அனுமதிக்க மறுத்த இந்தோனேசிய அதிகாரிகள், பழுதடைந்திருந்த இயந்திரத்தை திருத்தி, 1000 லீற்றர் டீசலையும் மற்றும் உணவுப் பொருட்களையும் கொடுத்து, தமது நாட்டுக் கடற்பரப்பை விட்டு வெளியேறுமாறு கூறினர்
இதையடுத்து, நேற்றுமுன்தினம் அகதிகள் படகு அவுஸ்ரேலியா நோக்கி பயணமானது, ஆனால் நேற்று மீண்டும் ஆச்சே மாகாணத்துக்கு அகதிகள் படகு திரும்பியது.
தமக்கு 1000 லீற்றர் டீசல் போதாது என்றும், மேலும், 6000 லீற்றர் டீசல் தருமாறும் படகில் இருந்தவர்கள் கோரியுள்ளனர்.
எனினும், மேலதிகமாக 6000 லீற்றர் டீசலை வழங்க முடியாது என்றும், அதன் பெறுமதி மிக அதிகமானது என்றும் இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1000 லீற்றர் டீசலை வழங்க முன்வந்த போது அவர்கள் மறுத்து விட்டதாக, ஆச்சே குடிவரவுப் பணியக அதிகாரி ஆச்மாட் சமடான் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி இந்தோனேசிய உள்துறை அமைச்சின் அதிகாரிகளுடன் தாம் கலந்துரையாடியதாகவும், எனினும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், இந்த விவகாரத்தை ஆளுனரிடம் கொண்டு செல்வதற்கு தாம் இணங்கியுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, இந்தப் படகில் பயணம் மேற்கொள்ளும் அகதிகளில் சிலர், தமிழ்நாட்டின் பவானி சாகர் முகாமில் இருந்தவர்கள் என்று, அங்குள்ள சிலர் அடையாளம் கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முகாமில் இருந்த 23 பேர் கடந்த மாதம் காணாமற்போயிருந்தனர் என்று கண்டறியப்பட்டது.