பொறுப்புக்கூறுவதற்கான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெறுவதை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று சிறிலங்காவின் தொழிற்பயிற்சி மற்றும் அபிவிருத்தி அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் இதுபற்றி அறிவித்த அவர்,
”விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்காவிடினும், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவைப் போன்று, வெளிநாட்டு நிபுணர்களின் உதவியை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும்.
காணாமற்போனோர் தொடர்பான செயலகம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையும் உள்ளது. உள்நாட்டுப் பொறிமுறை ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது.
போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக, ஐ.நா ஒருபோதும். அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
கோடன் வைஸ் எழுதிய நூலை மட்டுமே ஐ.நா மேற்கோள்காட்டியிருந்தது. தருஸ்மன் அறிக்கையிலும் அதுவே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
சிறிலங்கா இன்னும் கடுமையாகப் பணியாற்ற வேண்டியுள்ளது. நிலைமைகளை முன்னேற்றுவதற்கு இன்னும் அதிகம் செய்ய வேண்டியுள்ளது.
நாட்டில் நிலையான நல்லிணக்கத்தை அடைவதற்கு உறுதி பூண்டுள்ளோம் என்பதை, தொடர்ச்சியாக வெளிப்படுத்த வேண்டியுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.