சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் ரொகான் வெலிவிட்டவை, சிங்கப்பூர் அரசாங்கம் நாடு கடத்தியுள்ளது.
ஆசிய ஒலிபரப்பு கண்காட்சியில் பங்கேற்பதற்காக, கடந்த திங்கட்கிழமை ரொகான் வெலிவிட்டசிங்கப்பூர் சென்றிருந்தார்.
சிங்கப்பூர் விமானநிலையத்தில், அவரை மூன்று மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்த அந்த நாட்டின் குடிவரவு குடியகல்வுத்துறை அதிகாரிகள், இறுதியில் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி வழங்க முடியாது என்று கூறி கொழும்புக்குத் திருப்பி அனுப்பியுள்ளனர்.
சிஎஸ்என் தொலைக்காட்சியின் முன்னாள் தலைவரான ரொகான் வெலிவிட்ட அந்த தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிதி முறைகேடுகள் தொடர்பாக, மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்சவுடன் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்.
வெளிநாடு செல்வதற்கு இவருக்கு தடைவிதித்திருந்த நீதிமன்றம் பின்னர் அந்த தடையை நீக்கியிருந்தது.
இந்த நிலையிலேயே சிங்கப்பூருக்கு நுழைய அவர் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.