Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » ‘போர்க்களத்தில் ஒரு பூ’ இயக்குனர் கு.கணேசனின் படத்திற்கு கர்நாடக மாநில அரசின் விருது!

‘போர்க்களத்தில் ஒரு பூ’ இயக்குனர் கு.கணேசனின் படத்திற்கு கர்நாடக மாநில அரசின் விருது!

‘போர்க்களத்தில் ஒரு பூ’ இயக்குனர் கு.கணேசனின் படத்திற்கு கர்நாடக மாநில அரசின் விருது!

கர்நாடக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் கன்னட மொழித் திரைப்படங்களுக்கான திரைப்பட விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2015 ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ அரசியல் பிரிவு போராளியும் ஊடகவியலாளருமாகிய இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற திரைப்படத்தை இயக்கிய கர்நாடக வாழ் தமிழ் இயக்குநர் கு.கணேசன் அவர்கள் தயாரித்து இயக்கிய கன்னட மொழித்திரைப்படம் விருதிற்கு தேர்வாகியுள்ளது.

இயக்குநர் கு.கணேசன் தயாரித்து இயக்கியுள்ள ‘சவி நிலையா’ என்ற கன்னட படமே விருதிற்கு தேர்வாகியுள்ளது. இந்தப்படத்தில் நடித்துள்ள பேபி மேவிஷி சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

‘சவி நிலையா’ திரைப்படத்தில் சிறப்பாக நடித்து சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதினைப் பெறவுள்ள பேபி மேவிஷிக்கு இயக்குநர் கு.கணேசன் மற்றும் நளினி கணேசன் உள்ளிட்ட படக்குழுவினர் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

இயக்குநர் கு.கணேசன் அவர்கள் ஏற்கனவே ஆறு கன்னட மொழி திரைப்படங்களை இயக்கிய நிலையில் ‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரை உலகில் அறிமுகமானார்.

சிங்கள இராணுவம் தமிழர்கள் மீது மேற்கொண்ட இனப்படுகொலையின் கொடூரத்தை சனல்-4 தொலைக்காட்சி உலகின்முன் வெட்டவெளிச்சமாக்கியது. ஈழத்தமிழ் பெண் ஊடகவியலாளரான இசைப்பிரியாவை உயிருடன் பிடித்து சித்திரவதைக்குள்ளாக்கி படுகொலை செய்த காட்சிகளும் ஆதாரத்துடன் சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தில் இடம்பெற்றிருந்தது.

உலகத்தமிழர்களையும் மனிதநேயம் மிக்கவர்களையும் உலுக்கிய அக்காட்சிகள் ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த இயக்குநர் கு.கணேசன் அவர்களையும் மனதளவில் பெரிதும் பாதித்திருந்தது. அதன் வெளிப்பாடாக தனக்கு தெரிந்த திரை மொழியில் அதனை படைப்பாக்கியதன் வெளிப்பாடே ‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்படமாகும்.

நட்பு நாடாகிய இலங்கையுடனான நல்லுறவை பாதிக்கும் விதமாக காட்சிப்படுத்தல்கள் உள்ளதாக காரணம் கூறி இந்திய திரைப்பட தணிக்கைக் குழு இத்திரைப்படத்திற்கு தடைவித்துள்ளது. அதனை எதிர்த்து இயக்குநர் மற்ற்றும் தயாரிப்பாளர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நடைபெற்று வருகின்ற நிலையில் இசைப்பிரியா குடும்பத்தின் சார்பில் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது எனக்கூறி வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *