சிறிலங்காவில் வெள்ளத்தினாலும், நிலச்சரிவினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 15 மில்லியன் யுவான் (2.28 டொலர்) பெறுமதியான அவசர உதவிப் பொருட்களை விமானம் மூலம் அனுப்பி வைக்கவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. சீனாவின் வர்த்தக அமைச்சு நேற்று இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டது.
கூடாரங்கள், மடிக்கும் கட்டில்கள், மற்றும் உணவுப் பொருட்களை சீனா அனுப்பவுள்ளது. இந்த உதவிப் பொருட்கள் வாடகை விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று சீன வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சீனா கடந்த வெள்ளிக்கிழமை, 1.5 மில்லியன் டொலரை, நிவாரணப் பணிகளுக்கான நிதியுதவியாக வழங்கியிருந்தது.
வெள்ளம், மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறிலங்கா அரசாங்கம் கடந்த 19ஆம் நாள் அனைத்துலக சமூகத்திடம் இருந்து அவசர நிவாரண உதவிகளை கோரியிருந்தது.
ஏற்கனவே, இந்தியா, ஜப்பான், பாகிஸ்தான், பங்காதேஸ், துருக்கி ஆகிய நாடுகள் விமானம் மூலம், கொழும்புக்கு அவசர நிவாரண உதவிகளை அனுப்பியுள்ளன.
வெள்ளம் வடிந்து மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையிலேயே, சீனா அவசர நிவாரண உதவி பற்றிய அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது.