பொது இடத்தில் அவமதிப்புச் செய்தமைக்காக, கடற்படை கப்டன் பிரேமரத்னவிடம், கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீட் அகமட்டை மன்னிப்புக் கோருமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட வேண்டும் என்று, முன்னாள் கடற்படை அதிகாரியான றியர் அட்மிரல் எச்.ஆர்.அமரவீர வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய அவர், கிழக்கு மாகாண முதலமைச்சரின் நடத்தை அவரது தகுதிக்கு ஏற்றதல்ல. அவர் ஒரு மனிநோயாளி போல நடந்து கொண்டுள்ளார்.
பொது இடத்தில் கடற்படை அதிகாரி ஒருவரை அவமதிக்கும் உரிமை அவருக்கு இல்லை. பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் பகிரங்கமாக இப்படி அவமதிக்கப்பட்டது இது தான் முதல் முறை.” என்று தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி றியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ், அரசியல்வாதிகளின் உத்தரவுகளுக்கு படை அதிகாரிகள் கட்டுப்பட்டு நடக்க வேண்டியதில்லை. அரசுத் தலைவரான முப்படைகளினதும் தளபதியின் கீழேதான் அவர்கள் பணியாற்றுபவர்கள்.” என்று குறிப்பிட்டார்.
அதேவேளை ஓய்வுபெற்ற மேஜர், பிரதீப் உடுகொட உரையாற்றிய போது, முன்னர் அமைச்சராக இருந்த மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா, இராணுவ மேஜர் ஒருவரைத் தாக்கிய போது, மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அதனை மூடி மறைத்தது. அதற்கு எதிராக எதுவும் பேசாமல் இருந்த முன்னாள் படைத் தளபதிகள், இப்போது மட்டும் குரல் எழுப்புவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.