சம்பூரில் நடந்த சம்பவம், ஜி-7 மாநாட்டை இலக்கு வைத்து, முன்னரே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒன்றா என்பது குறித்து விசாரணை செய்யுமாறு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முப்படைகளின் தளபதிகளிடமும் கோரியுள்ளார்.
நேற்று அலரி மாளிகையில், சிறிலங்காவின் முப்படைகளின் தளபதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சம்பூர் விவகாரம் மற்றும், தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக, ஆராய்வதற்காக இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.
ஜி-7 நாடுகளின் தலைவர்களின் கூட்டத்துக்கு அழைக்கப்பட்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தச் சம்பவம் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டதா என்று விசாரிக்கும் படியும், சிறிலங்கா பிரதமர் கோரியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான எல்லா அறிக்கைகளையும், கவனத்தில் கொண்டு, குறிப்பாக, இணையங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களையும் உள்ளடக்கி அறிக்கையை தயாரிக்குமாறும், முப்படைகளின் தளபதிகளிடமும், சிறிலங்கா பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பல்வேறு தரப்பினரும் தமது சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பட இந்த விவகாரத்துக்கு தவறான அர்த்தம் கற்பிப்பதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.