கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட், கடற்படை அதிகாரி ஒருவரைத் திட்டிய விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் நிலையில், சிறிலங்கா கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தளபதியான றியர் அட்மிரல் நீல் ரொசாரியோ கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கிழக்குப் பிராந்தியக் கடற்படைத் தளபதியான றியர் அட்மிரல் நீல் ரொசாரியோ, ஏற்கனவே, சிறிலங்கா கடற்படையின் பிரதித் தலைமை அதிகாரியாகவும், தொண்டர் படைத் தளபதியாகவும் பணியாற்றி வந்தார்.
அவர் தற்போது திருகோணமலையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து அவர், சிறிலங்கா கடற்படையின் பிரதித் தலைமை அதிகாரியாகவும், தொண்டர் படைத் தளபதியாகவும் கடமையாற்றுவார்.
இதையடுத்து, கிழக்கு கடற்படைத் தளபதியாக, றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, றியர் அட்மிரல் நீல் ரொசாரியோவின் இடமாற்றம், கிழக்கு முதலமைச்சர் விவகாரத்துடன் தொடர்புடையதல்ல என்று, சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.
இந்த இடமாற்றம் மூன்று வாரங்களுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டு விட்ட ஒன்று, எனவும் அவர் கூறியுள்ளார்.