சம்பூர் மகாவித்தியாலயத்தில் நடந்த சம்பவத்துக்கு ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோவின் தவறுகளே காரணம் என்று, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் தெரிவித்துள்ளார்.
சம்பூரில் கடந்த வெள்ளியன்று நடந்த பாடசாலை ஆய்வுகூடத் திறப்பு விழாவில், தன்னை அவமதித்தாக கூறி, கடற்படை அதிகாரியை கடுமையான திட்டியிருந்தார் கிழக்கு முதலமைச்சர் நசீர் அகமட். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதன் பின்னணி தொடர்பாக அவர் விபரித்துள்ளார்.
“ஆளுனரின் மரியாதைக் குறைவான செயலால் நான் கோபமடைந்தேன். ஆளுனர் எனது பணிகளிலும் அதிகாரத்திலும் தொடர்ச்சியாகத் தலையீடு செய்து,வருவது எனது மதிப்பைக் குறைப்பதாக உள்ளது.
நிகழ்ச்சி தொகுப்பாளரால் முதலமைச்சர் மேடைக்கு அழைக்கப்படவில்லை. ஆளுனர் அழைப்பு விடுத்ததையடுத்து, நான் மேடைக்குச் செல்ல முயன்றேன். நிகழ்ச்சி தொகுப்பாளர் என்னைத் தடுக்க முனைந்தார். அப்போது நான் கோபமடைந்தேன்.
நான் முதலமைச்சர் என்றும், அவரை மேடைக்கு அழைக்க வேண்டும் என்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம், ஆளுனர் கூறியிருந்தால், இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது. கடற்படை அதிகாரிகள் அப்பாவிகள் என்று எனக்குத் தெரியும். இது ஆளுனரின் தவறு.
சம்பூர் நிகழ்வுக்கு முன்னதாக, கிண்ணியாவில் நடந்த நிகழ்வு ஒன்றில், பங்கேற்றிருந்தோம். அங்கு தான், சம்பூர் நிகழ்வுக்கு வருமாறு ஆளுனர் என்னை அழைத்தார்.
கிண்ணியாவில் இருந்து, சம்பூருக்கு உலங்குவானூர்தியில் என்னை அழைத்துச் செல்லுமாறு ஆளுனரிடம் கேட்டேன். ஆனால் உலங்குவானூர்தியில் இடமில்லை என்று ஆளுனர் மறுத்து விட்டார்.அது என்னைக் காயப்படுத்தி விட்டது.
கிண்ணியா நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் போதே, இடையில் புறப்பட்டு சம்பூருக்கு சென்றால், சரியான நேரத்துக்கு அங்கு வந்து விடலாம் என்று அவர் கூறினார். தாம் உலங்கு வானூர்தியில் பின்னால் வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே நான் முன்கூட்டியே சம்பூருக்குச் சென்று அவர்களுக்காக காத்திருந்தேன். ஆளுனரும், அமெரிக்கத் தூதுவரும் பின்னரே வந்து சேர்ந்தனர்.
அங்கு எனக்கு மரியாதை அளிக்கப்படவில்லை. அமைப்பாளர்களிடம் ஆளுனர் தகவல் தெரிவித்திருந்தால், இதுபோன்று நடந்திருக்காது.
பொதுமக்களின் முன்பாக அவமானப்படுத்தப்பட்ட போது, நான் நிதானம் இழந்து விட்டேன். முதலமைச்சர் எவ்வாறு நடத்தப்படுகிறார் என்பது இதனைக் காட்டுகிறது.
முதலமைச்சர் பதவிக்கு மரியாதை அளிக்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் அப்பால் நான் கிழக்கு மாகாணத்தின் தலைவன்.” என்றும் அவர் தெரிவித்தார்.