சிறிலங்காவில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய விமானப்படையின் இராட்சத போக்குவரத்து விமானத்தில் எடுத்து வரப்பட்ட உதவிப் பொருட்கள், சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவிடம் கையளிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக இரண்டு கடற்படைக் கப்பல்களிலும், விமானம் ஒன்றிலும் இந்தியா மொத்தம் 85 மெட்ரிக் தொன் உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளது.
கடற்படைக் கப்பல்களில் எடுத்து வரப்பட்ட 35 மெட்ரிக் தொன் உதவிப் பொருட்கள் நேற்று சிறிலங்கா பிரதி வெளிவிகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவிடம் இந்தியத் தூதுவரால் கையளிக்கப்பட்டது.
அதேவேளை, 50 மெட்ரிக் தொன் உதவிப் பொருட்களுடன் நேற்றுக்காலை வந்த இந்திய விமானப்படையின் இராட்சத போக்குவரத்து விமானமான சி-17இல் எடுத்து வரப்பட்ட உதவிப் பொருட்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹாவினால், சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவிடம் கையளிக்கப்பட்டது.
இதில், 700 கூடாரங்கள், 1000 தார்ப்பாய் விரிப்புகள், 10 மின்பிறப்பாக்கிகள், 100 அவசரகால விளக்குகள், 10 ஆயிரம் பேருக்கான நோய்த்தடுப்பு மருந்துகள், நீர் சுத்திகரிப்பு கருவிகள், குடைகள், மழைக்கவசங்கள், மெத்தைகள் உள்ளிட்டவை அடங்கியுள்ளன.