இறுதிக்கட்டப் போரில், முள்ளிவாய்க்காலில் சிறிலங்காப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைவு கூரும், நிகழ்வு இன்று காலை முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது.
வடக்கு மாகாணசபையின் ஏற்பாட்டில், இன்று காலை நடந்த நினைவேந்தல் நிகழ்வில், பிரதான சுடரை ஏற்றி வைத்து முதலமைச்சர் விக்னேஸ்வரனை் அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவை சேனாதிராசா, தர்மலிங்கம் சித்தார்த்தன், சிறிதரன், சாந்தி சிறிஸ்கந்தராசா, சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரன், அரியநேத்திரன், மற்றும் வடக்கு மாகாண அமைச்சர்கள், சத்தியலிங்கம், ஐங்கரநேசன், டெனீஸ்வரன், குருகுலராஜா, மாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், “முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் எந்த சாட்சியங்களும் இன்றி கொல்லப்பட்டார்கள்.
இவ்வாறு இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கு சிறிலங்காவின் சட்டத்தில் இடமில்லை.
சிறிலங்காவில் உள்ளக விசாரணை நடத்தப்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சரியான தீர்வு கிடைக்காது.
இதனாலேயே அனைத்துலக போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம். அனைத்துலக விசாரணையின் மூலமே உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையும்.
கடந்த கால போரில் யார்- யார் கொல்லப்பட்டார்கள், எவ்வாறு கொல்லப்பட்டார்கள்? யாரால் கொல்லப்பட்டார்கள்? என்ற சாட்சியங்கள் இல்லை. இது குறித்து விசாரணை செய்யவேண்டும்.
இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது மரபு ரீதியானது. ஒன்று சேர்ந்து சோகத்தை வெளிப்படுத்துவது எங்களின் பாரம்பரிய மரபாகும்.
இந்த அஞ்சலி நிகழ்வுகளைக் கூட கடந்த அரசாங்கம் தடுத்த போதிலும், புதிய அரசாங்கம் எங்கள் மனநிலையை புரிந்துகொண்டு தடை விதிக்கவில்லை.
அதேபோல் தமிழ் மக்களின் பிரச்சினைக்காக தீர்வுகளை புதிய அரசாங்கம் வழங்கும் என நம்புவதாகவும், தெரிவித்தார்.