Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » News » Articals » முள்ளிவாய்க்காலுக்குப் பிந்திய ஏழு ஆண்டுகள் (என்.கண்ணன்)

முள்ளிவாய்க்காலுக்குப் பிந்திய ஏழு ஆண்டுகள் (என்.கண்ணன்)

முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு ஏழு ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்ற சூழலில், இந்த ஏழு ஆண்டுகளில் தமிழர் தரப்பு எதனைச் சாதித்திருக்கின்றது என்ற பரவலான கேள்வி எழுந்து நிற்கிறது.

ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போர் நடந்து கொண்டிருந்த நாட்களிலும், அதற்குப் பிந்திய மாதங்களிலும், இலங்கை தான் சர்வதேச ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக மாறியிருந்தது. சர்வதேச நாடுகளின் கவனம் முழுவதும் இலங்கை மீதே திரும்பியிருந்தது.

எனினும், இலங்கை மீதான, தமிழர்கள் மீதான இந்தக் கவனக் குவிவை ஆதரவு என்பதா- அனுதாபம் என்பதா என்ற கேள்வி இருக்கிறது.

முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் பேரழிவைச் சந்தித்தது ஒரு வரலாற்றுத் துயரம் என்ற போதிலும், தமிழரின் போராட்டத்தை உலகறியச் செய்த உச்சக்காலமாகவும் அதுவே இருந்தது என்பதை மறக்கவோ மறுக்கவோ முடியாது.

ஏழு ஆண்டுகளுக்கு முன்னர், அவ்வாறு உச்சநிலைக்குக் கொண்டு செல்லப்பட்ட தமிழரின் போராட்டம், அதற்குப் பிந்திய காலத்தில் கீழ்நோக்கிய வீழ்ச்சி ஒன்றையே சந்தித்திருக்கிறது.

தமிழரின் போராட்டத்தை தலைமை தாங்கிய விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியினால் ஏற்பட்ட வெற்றிடம், விடுதலைப் புலிகளுக்குப் பிந்திய சூழலில் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் ஏற்பட்ட பிளவுகள், புலிகளுக்குப் பின்னர் தமிழர் தரப்புக்குத் தலைமை தாங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்ட வரையறைகளுக்கு அப்பால் நகர்ந்து கொள்ளாமல் தனக்குத் தானே போட்டுக் கொண்ட குறுகிய வட்டம் என்று பல்வேறு காரணிகளால் தமிழரின் போராட்டம் கீழ் நோக்கிய சரிவு ஒன்றைச் சந்திக்க நேரிட்டது.

முள்ளிவாய்க்காலிலும் அதற்கு முன்னரும், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும், அழிவுகளுக்கும், நியாயம் தேடவோ, நீதியைப் பெறவோ முடியாத நிலையில் தான் இந்த ஏழு ஆண்டுகளையும் தமிழர் தரப்பு கழித்திருக்கிறது.

இன்னொரு பக்கத்தில், அரசியல் ரீதியாக தமிழ் மக்களின் உரிமைகளை வெற்றி கொள்வதற்கான போராட்டத்திலும், தமிழர் தரப்பினால் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றத்தையும் எட்ட முடியாத நிலையிலும் இருக்கிறது.

தமிழர்களுக்கு ஏற்பட்ட அநீதிகளுக்கு நீதியைப் பெற்றுக் கொள்வதும், தமிழர்களின் அரசியல் இருப்பை உறுதி செய்து கொள்வதற்கான உரிமைகளைப் பெற்றுக் கொள்வதும் தான், இன்றைய நிலையில் முக்கியமான இரண்டு கடப்பாடுகளாக – தேவைப்பாடுகளாக இருக்கின்றன.

இந்த இரண்டு விடயங்களிலும், தமிழர் தரப்பு ஒரு கட்டத்துக்கு மேல் முன்னகர முடியாத நிலையே ஏற்பட்டிருக்கிறது.

தமிழர் தரப்பு சரியாக நிலைமைகளைக் கையாளத் தெரியாததால், தான் இந்த நிலை ஏற்பட்டது என்று எழுந்தமானமாகக் குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாது.

இந்த விவகாரத்தில், சர்வதேச சக்திகளின் அழுத்தங்கள், தலையீடுகளையும் தாண்டி, இந்த இரண்டு விடயங்களையும் நிறைவேற்றிக் கொள்வதில் சிக்கல்கள் இருப்பதை மறுக்க முடியாது.

முள்ளிவாய்க்கால் பேரவலம், பாதிக்கப்பட்ட இனம் என்று தமிழர் தரப்புக்கு, சர்வதேச அரங்கில் ஒரு உச்ச அங்கீகாரத்தைக் கொடுத்திருந்தது.

அதனை அவர்களின் அனுதாப பார்வை என்று சொல்வதா அல்லது நீதியை நிலைநாட்டுவதற்கான முயற்சி என்று சொல்வதா அல்லது சுயஇலாப நோக்கம் கொண்டது என்று சொல்வதா என்ற கேள்வி இருக்கிறது.

ஏனென்றால், முள்ளிவாய்க்கால் பேரழிவுகளுக்குப் பின்னர், எந்த சர்வதேச சமூகத்தின் ஆதரவை நாம், பலமானதென்று நம்பினோமோ, இன்று அவர்கள் எம்முடன் இல்லை என்பதே கள யதார்த்தம்.

முள்ளிவாய்க்காலில் தமிழர்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காகத் தான் சர்வதேச சமூகம், எம்முடன் இணைந்து நிற்கிறது, செயற்படுகிறது என்று தமிழர் தரப்பு போட்டது தப்புக்கணக்கு என்பது, கடந்த ஆண்டு நிகழ்ந்த ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர் தான் வெளிச்சமாகியது.

சர்வதேச சக்திகள், தமிழர்களின் அழிவுகளை, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எல்லாம், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் என்ற பெயர்களில் முன்னிலைப்படுத்திய அளவுக்கு, நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தவறியிருக்கின்றன என்பதே உண்மை.

தமக்கும் பணியாத மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்கான கருவியாகவும், அந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான கருவியாகவுமே, இந்த விவகாரத்தையும், தமிழர் தரப்பையும் சர்வதேச சமூகம் பயன்படுத்திக் கொண்டது.

தமது தேவைகள் நிறைவேற்றப்பட்டு விட்டதும், சர்வதேச சமூகம், தமிழர் தரப்பை கிட்டத்தட்ட கைகழுவி விட்டுவிட்டது என்றே கூறலாம்.

போரின் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பொறுப்புக்கூறுவதற்கான ஒரு நம்பகமான பொறிமுறையை உருவாக்கும் செயற்திட்டம் இன்றுவரை உருவாக்கப்படவில்லை என்றால் அதற்குக் காரணம், சர்வதேச சமூகத்தின் மெத்தனப்போக்கு மட்டும் தான்.

கடந்த ஆண்டு இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த போது, விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவதற்காக, ஆறுமாத காலஅவகாசம் கேட்டது. அதன் பேரில் தான், ஐ.நா விசாரணை அறிக்கை வெளியிடப்படுவது செப்ரெம்பர் வரை தாமதிக்கப்பட்டது.

அந்த அறிக்கை வெளியிடப்பட்டு. அதனடிப்படையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், தீர்மானமும் நிறைவேற்றப்பட்ட போதிலும், இன்னமும் கூட அரசாங்கம் ஒரு விசாரணைப் பொறிமுறையை உருவாக்கவில்லை.

இந்தளவுக்கு காலதாமதம் ஏற்படுத்தப்படுவது, விசாரணைப் பொறிமுறையின் மீதான நம்பிக்கையீனத்தையே தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது. நம்பகமான விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்கும் அல்லது அதற்கு அழுத்தம் கொடுக்கும் விடயத்தில், சர்வதேச சமூகம், வெறும் வார்த்தைகளுக்கு அப்பால் செல்லவில்லை.

தமிழர் தரப்பு, கடந்த ஏழு ஆண்டுகளாக நீதியைப் பெறமுடியாதிருப்பதற்கு இந்த சர்வதேச சூழமைவும் ஒரு காரணம்.

அதேவேளை, அரசியல் ரீதியாக தமிழர்கள் தமது உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்வதிலும் எதையுமே சாதித்து விட முடியவில்லை. அதிகபட்சமாக அவர்களால், ஆட்சி மாற்றம் ஒன்றுக்கான கருவியாக மட்டும் இருந்திருக்கிறார்கள்.

இந்த ஆட்சி மாற்றத்தின் மூலம், தமக்கு அழிவுகளைத் தந்த ஒரு அரசாங்கத்தின் முகத்தில் அறைந்து விட்ட திருப்தியைத் தவிர வேறெதையும் பெரிதாக தமிழர்களால் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

புதிய ஆட்சியில் சில ஜனநாயக வெளிகளை அனுபவிக்கும் வாய்ப்பு மட்டுமே தமிழர்களுக்குக் கிடைத்திருக்கிறதே தவிர, அவை ஒன்றும், தமிழர்களுக்காக கொடுக்கப்பட்ட உரிமைகளல்ல. ஏனையவர்கள் கடந்த காலங்களில் அனுபவித்த- தமிழர்களுக்கு மறுக்கப்பட்ட சுதந்திரங்கள் தான் அவை.

ஆனாலும், தமிழர்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, உரிமைகளை உறுதிப்படுத்தும் வாய்ப்பு, இராணுவ நெருக்குவாரங்களற்ற சூழல், சிங்களக் குடியேற்ற அச்சுறுத்தல்கள் இல்லாத நிலை, என்பன போன்ற விடயங்களில் எந்த முன்னேற்றங்களையும் புதிய ஆட்சி பெற்றுக் கொடுக்கவில்லை.

முள்ளிவாய்க்காலுக்குப் பிந்திய ஏழு ஆண்டுகள், தமிழர்தரப்பை சர்வதேச அரங்கிலும், உள்ளக அரசியல் அரங்கிலும் பலவீனப்படுத்தி விட்டிருக்கின்றது. இதற்கு புறச்சக்திகளும் காரணமாக இருந்தாலும், தமிழர் தரப்பிடையே இன்னமும், நீடிக்கும் ஒற்றுமையீனமும், குரோத மனப்பாங்கும் நிறையவே காரணிகளாக இருந்திருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

முள்ளிவாய்க்கால் பேரழிவு தமிழர்களுக்குப் பாடமாக அமைந்தது. முள்ளிவாய்க்காலில் பாடம் கற்ற தமிழர் தரப்பு, ஏழு ஆண்டுகள் கடந்து சென்றுள்ள போதிலும், அந்தப் பாடத்தை வைத்து மேல்நோக்கிச் செல்வதற்கான எத்தனங்களில் இறங்கவில்லை என்பது தான் துன்பகரமானது.

இந்த நிலை எந்தளவு காலத்துக்கு நீடிக்கப் போகிறது,?

நிலையான அரசியல் தீர்வின் ஊடாக, தமிழர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படுவதற்கும், எதிர்கொண்ட அநீதிகளுக்கு நீதியைப் பெறுவதற்கும் இன்னும் எத்தனை காலங்கள் தான் காத்திருக்க வேண்டும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *