வரும் மே 18ஆம் நாள் நடைபெறவுள்ள, போர் வெற்றி நாள் நிகழ்வுகளுக்கு சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “பத்தரமுல்லையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசெனவின் தலைமையில், ஏழாவது போர் வெற்றி நாள் நிகழ்வுகள் இடம்பெறும்.
இதையடுத்து சுதந்திர சதுக்கத்தில் கலாசார நிகழ்வுகள் நடைபெறும். இதில், சிறிலங்கா பிரதமர், அமைச்சர்கள், முப்படைகளின் தளபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், போர் வீர்ர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பங்கேற்பர்.
அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்பர். முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவோ அவரது ஆதரவாளர்களோ அழைக்கப்படவில்லை.
இம்முறை இராணுவ அணிவகுப்பை நடத்துவதில்லை என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஏனென்றால் அதற்கு அதிகம் செலவு ஏற்படும்.
குருநாகலவில் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது ஆதரவாளர்களால் போர் வெற்றி நாள் நிகழ்வு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன்.
ஆனால், அந்த நிகழ்வில் பங்கேற்பதற்கு படையினர் எவருக்கும் அனுமதி அளிக்கப்படாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.