அமெரிக்கக் கடற்படையின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் கொள்கை மற்றும் மூலோபாயத் திட்டமிடல் பணிப்பாளர், மேஜர் ஜெனரல் ஸ்டீவன் ஆர் ருடர், சிறிலங்காவுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டமை தொடர்பான தகவல்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
இவர் கடந்த 11ஆம் நாள் சிறிலங்காவுக்கான பயணத்தை ஆரம்பித்து, 13ஆம் நாள் அதனை நிறைவு செய்திருந்தார்.
பசுபிக் கட்டளைத் தலைமையகத்தில் இருந்து மூத்த அதிகாரி ஒருவர் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டமை இதுவே முதல் முறையாகும். அண்மையில், ஏழாவது கப்பற்படையணியின் யுஎஸ்எஸ் புளூ ரிட்ஜ் போர்க்கப்பல் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் தொடர்ச்சியாக இந்தப் பயணம் இடம்பெற்றுள்ளது.
சிறிலங்கா வந்திருந்த, மேஜர் ஜெனரல் ஸ்டீவன் ஆர் ருடர், சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதி, முப்படைகளின் தளபதிகளைச் சந்தித்திருந்தார்.
உலகில் பரபரப்பான, கொள்கலன் துறைமுகங்களில் 14ஆவது இடத்தில் உள்ள கொழும்புத் துறைமுகத்துக்கு வரும் கப்பல்களின் பாதைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் சிறிலங்கா கடற்படையின் மேற்குப் பிராந்தியத் தலைமையகத்துக்கும் அவர் சென்றிருந்தார்.
கடற்பாதுகாப்ப, மனிதாபிமான உதவிகள், அனர்த்த மீட்பு, ஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கைகள், போன்ற முக்கியமான விடயங்களில், எதிர்கால ஒத்துழைப்புக்கான பரப்பை அடையாளம் காண்பதற்காகவே, மேஜர் ஜெனரல் ஸ்டீவன் ஆர் ருடர், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
இந்தியப் பெருங்கடலில் சிறிலங்காவின் மூலோபாய அமைவிடத்தைப் பொறுத்தவரையில், கடற்பாதுகாப்பு, இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்வது, சுதந்திரமான கடற்பயணம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் பிராந்திய முயற்சிகளில் முக்கிய பங்காளராக விளங்குகிறது என்று, அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.