அண்மையில் சிறிலங்கா அரசாங்கம் புலனாய்வுப் பிரிவிடமிருந்து அறிக்கை ஒன்றைப் பெற்றுக் கொண்டது. சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த சில மேஜர் ஜெனரல்களுடன் பசில் ராஜபக்ச பேச்சு நடத்தியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை சிறிலங்கா அரசாங்கத்தை நிலைகுலையச் செய்தது.
பொதுவாக, சிறிலங்கா இராணுவ அதிகாரிகள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை மட்டுமல்லாது, அரசாங்க அரசியல்வாதிகளைச் சந்திப்பதற்குக் கூட இராணுவத் தளபதியின் அனுமதியைப் பெறவேண்டும். ஆனால் இவ்வாறானதொரு அனுமதியுமின்றியே பசில் ராஜபக்சவை சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல்கள் சந்தித்துள்ளனர்.
மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட போது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் சூடான விவாதம் ஒன்றில் ஈடுபட்டிருந்தார். மங்கள சமரவீரவுடனான முரண்பாட்டை அடுத்தே சாஜி கல்லகே கொழும்பிற்கு இடம்மாற்றப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. பசில் ராஜபக்சவுடனான மேஜர் ஜெனரல்களின் சந்திப்புத் தொடர்பான புலனாய்வுத் துறையினரின் அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் பெற்றுக் கொண்ட கையோடு, மகிந்த மற்றும் கோத்தபாய ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டது.
மகிந்தவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த இராணுவ வீரர்கள் மகிந்தவின் பாதுகாப்புக் கடமையிலிருந்து வெளியேறும் போது அவரது காலில் விழுந்து வணங்கும் காட்சிகளை உள்ளடக்கிய காணொலி ஒன்றை மகிந்தவின் ஊடகப் பிரிவு வெளியிட்டது. பொதுவாக, சிறிலங்கா இராணுவ வீரர்கள் அரசியல்வாதிகளுக்கு மரியாதை செலுத்தும் முகமாக முன்மரியாதை (Salute) செய்வது வழமையாகும். அத்துடன் அவர்களுக்கென வழங்கப்பட்ட கடமைகளை இராணுவ வீரர்கள் செய்வது வழக்கமாகும்.
ஆனால் மகிந்தவின் ஊடகப் பிரிவால் வெளியிடப்பட்ட காணொலியில் உள்ள காட்சிகளைப் பார்க்கும் போது, சிறிலங்கா அரசாங்கத்தால் மகிந்தவைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் தமது கடமைகளுக்கும் மேலாக கீழிறங்கிச் செயற்படுவதைக் காணமுடியும். மகிந்தவின் பாதுகாப்பிற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட கப்டன் திஸ்ஸ என்பவர் தாஜூதீனின் படுகொலை தொடர்பாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மகிந்தவிற்கு ஆதரவான புத்த பிக்குகள்:
மகிந்தவிற்கான இராணுவப் பாதுகாப்பை மீண்டும் வழங்க வேண்டும் என தற்போது பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் இடம்பெறுவதானது சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது. அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது மகிந்தவிற்கான இராணுவப் பாதுகாப்பு மீண்டும் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.
தற்போது பௌத்த பீடாதிபதிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்த மகிந்தவிற்கான இராணுவப் பாதுகாப்பு மீளவும் வழங்கப்பட வேண்டும் எனப் பரப்புரை செய்து வருகின்றனர். இது தொடர்பான பௌத்த பீடாதிபதிகளின் அறிக்கைகளை மகிந்தவின் ஊடகப் பிரிவானது ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளது. மகிந்தவிற்கான இராணுவப் பாதுகாப்பு மீண்டும் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி சத்தியாக்கிரகம் ஒன்றில் ஈடுபடுவதற்கான தயார்ப்படுத்தல் ‘பௌத்த பிக்குக்களின் குரல்’ எனக் கூறும் ‘பெவிடி கண்ட’ என்கின்ற அமைப்பிலுள்ள மகிந்த ஆதரவுப் பிக்குகள் தரப்பால் மேற்கொள்ளப்படுகிறது.
மகிந்தவிற்கு காவற்துறை மற்றும் சிறப்பு அதிரப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுவதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் பலத்த சந்தேகம் தோன்றியுள்ளது. எடுத்துக்காட்டாக, மங்களவுடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே மகிந்தவின் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாகச் செயற்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் ஜெனீவா பரிந்துரைகள் தொடர்பாக இராணுவ அதிகாரிகளிடம் எடுத்துக் கூறுவதற்காக மங்கள யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்த போது, மகிந்த ராஜபக்சவின் முன்னாள் பாதுகாப்புப் பொறுப்பதிகாரி என சாஜி கல்லகே தன்னைத் தானே அறிமுகம் செய்திருந்தார். சிறிலங்கா அரசாங்கத்தால் அமெரிக்காவின் ஜெனீவா பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் தானும் அங்கம் வகிப்பதாக சாஜி கல்லகே மங்களவிடம் தெரிவித்திருந்தார்.
இப்பரிந்துரைகள் தொடர்பான இராணுவத்தின் அபிப்பிராயங்களை கல்லகேயின் ஊடாக செயற்குழுவிற்கு அறியத்தருவது சாத்தியமான விடயமாகும் என பாதுகாப்புச் செயலர் தெரிவித்திருந்தார். எனினும், தான் யுத்த களத்தில் செயற்பட்டுள்ளதன் காரணமாக செயற்குழுவில் உள்வாங்கப்பட வேண்டும் என சாஜி கல்லகே குறிப்பிட்டார்.
இந்நிலையில் இது தொடர்பாக மங்கள எந்தவொரு கருத்தையும் முன்வைக்கவில்லை. ஆனாலும் யாழ்ப்பாணத்தில் சாஜி கல்லகேக்கும் மங்களவிற்கும் இடையில் சூடான வாய்த் தர்க்கம் இடம்பெற்றதாக மகிந்த ஆதரவு ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.
சிறிலங்கா இராணுவத்திற்கும் மைத்திரி-ரணில் அரசாங்கத்திற்கும் இடையில் பிரச்சினைகளை உருவாக்குவதற்கான பாரியதொரு முயற்சியை மகிந்த ஆதரவுக் குழுக்கள் மேற்கொண்டு வருகின்றமை இங்கு வெளிப்படை. இக்காரணத்தை அடிப்படையாகக் கொண்டே மகிந்த மற்றும் கோத்தபாயவிற்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பை மைத்திரி-ரணில் அரசாங்கம் நீக்குவதெனத் தீர்மானித்திருக்கலாம்.
இராணுவப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் உயர் இராணுவ அதிகாரிகளுடனான மகிந்த மற்றும் கோத்தபாயவின் நெருக்கமான உறவை மிகச் சாதாரணமாக எடைபோட முடியாது. ஆகவே, இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கமானது விழிப்புடன் செயற்பட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.
ஆங்கிலத்தில் – உபுல் ஜோசப் பெர்னான்டோ
மொழியாக்கம் – நித்தியபாரதி்
வழிமூலம் – சிலோன் ருடே