Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » சீரழியும் யாழ்ப்பாணத்தை திருத்தப் போவது யார்?

சீரழியும் யாழ்ப்பாணத்தை திருத்தப் போவது யார்?

யாழ்ப்பாணத்தில் பிறந்த ஒவ்வொரு தமிழனையும் தலை குனியச் செய்து கொண்டிருக்கும் சம்பவங்கள் நாளாந்தம் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. வாள் வெட்டுச் சம்பவங்கள், பாலியல் வன்முறைகள், போதைப் பொருள் பாவனை மற்றும் கைதுகள், குழுச் சண்டைகள், சாதிச் சண்டைகள், என யாழ்ப்பாணம் மாறியுள்ளது.

யாழ்ப்பாணத்தின் இந்த நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நீதிபதி இளஞ்செழியன் கடுமையான தண்டனைகளையும் அறிவிப்பபுக்களை நாளாந்தம் வெளியிட்டுக் கொண்டிருந்தாலும், குற்றங்களும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு பிணை வழங்கப்பட மாட்டாது என்றும், மரண தண்டனையே வழங்கப்படுமென்றும் கூறிய போதும் பாலியல் சம்பவங்கள் குறையவில்லை.

அண்மையில் செம்மணிப் பகுதியால் தனியே வந்து கொண்டிருந்த ஆசிரியை ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் பாலியல் சேட்டைகள் செய்துள்ளனர். அதிஸ்டவசமாக அவ்வழியினால் குறித்த நேரத்தில் வாகனங்கள் வந்தமையினால் இளைஞர்கள் நழுவிச் சென்றுவிட்டனர். இதுபோன்று அண்மைக் காலமாக யாழ்ப்பாணத்தில் பல சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

யாழ்ப்பாணம் தற்போது போதைப் பொருட்களின் மையமாக மாறிவருகின்றது. இந்தியாவின் கேரளாவிலிருந்தும், பாகிஸ்தானிலிருந்தும் கடல்வழியாக கொண்டுவந்து யாழ்ப்பாணம் ஊடாக இலங்கைக்குள் கொண்டுவரும் தமது விநியோக மார்க்கமாக வியாபாரிகள் மாற்றி வருகின்றார்கள். அதேபோல் தென் இலங்கையிலிருந்து போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும் விநியோக மார்க்கமாகவும் யாழ்ப்பாணத்தைப் பயன்படுத்துகின்றன என்பது தெரியவந்துள்ளது.

அதேவேளை, யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கஞ்சா மற்றும் ஹெரோயின் போன்ற போதைப் பொருட்களும் அண்டைய வாரங்களில் கைப்பற்றப்பட்டுள்ளது. இவற்றை நேரடியாக பொலிஸாரே கண்டுபிடிக்கவில்லை. பொது மக்கள் வழங்கிய தகவலைத் தொடர்ந்தே கைப்பற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், சமூக விரோதச் செயலில் ஈடுபடுகின்ற குழுக்களோடு பொலிஸார் சிலருக்கு தொடர்புகள் காண்ப்படுகின்றதான சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டு வருவதை அவதானிக்ககூடியதாக இருக்கின்றது.

காராணம் போதைப் பொருட்கள் தொடர்பாக பொதுமக்களினால் பொலிஸாருக்கு தகவல்களை வழங்கும்போது அவ்வாறு தகவல்களை வழங்கிய சிலரது விபரங்கள் வெளியாகி இருக்கின்றது. பொலிஸாரால் பாதுகாக்கப்பட வேண்டிய விபரங்கள் இவ்வாறு வெளியாகின்றமையால் தகவல்களை வழங்குபவர்கள் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன. இது, ‘வேண்டாம் வம்பு’ என்று பொது மக்கள் ஒதுங்கி செல்லும் சூழலையே உருவாக்கும்.

இவற்றுக்கு அப்பால் தென் இலங்கையிலிருந்து போதையூட்டும் லேகியங்கள், உருண்டைகள் என்பவற்றையும் யாழ்ப்பாணத்தில் அதிகமாக விற்பனை செய்வதில் சமூக விரோதிகள் ஈடுபட்டுள்ளார்கள். அதேபோல், தென் இலங்கையிலிருந்து பாலியல் தொழிலாளர்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைத்து விபச்சாரத்தையும் யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கச் செய்துள்ள சமூக விரோதிகளின் நோக்கம் வெற்றியடைந்துள்ளது.

இவற்றின் விளைவாக சுயம் இழந்து சிந்திக்கின்ற எமது இளைஞர்கள் ஆளுக்கொரு குழுவாக தமக்கென ஒரு பெயரையும் சூட்டிக் கொண்டு கோடாரிகள், வாள்கள், கத்திகள், கைக்குண்டுகள் என தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதும் அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் சுன்னாகத்தில் செல்வந்தர் ஒருவர் தனது மகளை காதலிக்கும் ஒரு சாதி குறைந்த இளைஞனை பழி வாங்குவதற்காக கூலிக்கு இரண்டு இளைஞர்களை ஈடுபடுத்தியதில் தொடங்கியது, இந்த வாள்வெட்டுக் குழுக்களின் செயற்பாடுகள்.

இப்போது ஊருக்கு ஒரு குழு என்றவகையில் பெருகியுள்ளன. முன்னர் இரவு நேரங்களில் வீடு புகுந்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் இப்போது தமது சண்டித்தனத்தை வெளிப்படுத்துவதற்காக பகலிலேயே துரத்தி துரத்தி வெட்டுவதை துணிகரமாக செய்கின்றார்கள்.

கடந்த வாரம் கோண்டாவிலில் இரண்டு இளைஞர்கள் புகையிரத தண்டவாளத்தில் படுத்திருந்து பலியானதாக ஒரு செய்தி வெளியாகி இருந்தது. உண்மையில் அந்த இளைஞர்களில் ஒருவர் கோப்பாயையும், மற்றவர் திருநெல்வேலியையும் சேர்ந்தவரகள். இருவருமே தண்டவாளத்தில் படுக்கும் அளவுக்கு மன உளச்சலுக்கு உள்ளாகி இருந்ததாக தெரியவில்லை. இருவரும் இணைந்து தண்டவாளத்தில் படுக்கும் அளவிற்கு நெருங்கிய நண்பர்களும் இல்லை எனத் தெரிகின்றது.

இந்நிலையில், அவர்களை கொலைசெய்தவர்களே அவ்விடத்தில் கொண்டுவந்து தண்டவாளத்தில் போட்டுவிட்டு அவர்களின் மரணத்தை திசை திருப்பியிருக்கின்றார்கள் என்பதே உண்மையாக இருக்க முடியும் என்று முழு யாழ்ப்பாண மக்களுமே சந்தேகிக்கின்றார்கள். இப்படி ஒரு சந்தேகம் பொலிஸாருக்கு வந்திருக்கின்றதா? அப்படி ஒரு கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருக்கின்றார்களா? என்பது தொடர்பாக எந்தச் செய்திகளும் இதுவரை தெரிய வரவில்லை.

இவ்வாறன சூழலிலேயே, வாள்வெட்டுக் குழுவொன்றைப் பொலிஸார் சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்துள்ளனர். மானிப்பாய் லோட்டன் வீதியை சேர்ந்த தனு ரொக் என அழைக்கப்படும் இந்த குழுவின் தலைவன் எனக் கருதப்படும் மோகன் தனுசன் (20வயது) என பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு சுவிஸ்லாந்தில் உள்ள ‘மோட மாமா’ என குறிப்பிடப்படும் ஒருவர் நிதியுதவி அளித்துள்ளமைக்கான ஆதாரங்களும் பொலிஸாரிடம் சிக்கியுள்ளன.

இந்நிலையில் குறித்த ‘மோட மாமா’ சுவிஸ்லாந்தில் இருந்து கொண்டு, யாழில் குற்றங்களுடன் கூடிய சூழலை உருவாக்குவதற்காக மோட்டுத்தனமாக பணம் வழங்கினாரா? – மோட மாமாவின் பின்னணி என்ன? போன்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தற்போது, யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டுச் சம்பவங்கள் மற்றும் சமூகவிரோதச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாருக்கு மேலதிகமாக அதிரடிப்படையையும் நடவடிக்கையில் ஈடுபடுத்துமாறு நீதிபதி இளஞ்செழியன் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல் விடுத்திருக்கின்றார்.

நீதிபதியின் அறிவிப்புக்களினால் வாள்வெட்டுக் குழுக்கள் கதி கலங்கியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் சிலாகிக்கப்படுகின்றது. ஆனால் அதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை. அப்படியாக இருந்திருந்தால், முதன் முதலில் வாள்வெட்டுச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு இன்னும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டில்லு குழுவோடு, ஆவா குழுவோடும் இந்த நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்க வேண்டும். ஆனால் அண்மைய நாட்களில் பல குழுக்கள் உருவாகி விட்டார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

வடக்கில் படைகள் குறைப்புச் செய்ய வேண்டும் என்றும், படை முகாம்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்றும், படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் நிலங்களை, மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு படைகள் தூரப்பகுதிக்கு சென்றுவிட வேண்டும் என்றும் தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கையில் வாள் வெட்டுக் குழுக்களை கட்டுப்படுத்தும் போர்வையில் மக்கள் மத்தியில் மீண்டும் அதிரடிப்படையினரை வரவழைக்க வேண்டிய துரதிஷ்டம் அரங்கேறுகின்றது.

வாள் வெட்டுக் குழுக்களும், போதைப் பொருட்களும் அதிகரித்துள்ளதன் பின்னணி நோக்கமே, படையினரின் அவசியத்தை நமக்கு உணர்த்துவதா? அல்லது யுத்தம் தமிழ் இனத்தை சிதைத்துவிட்டதால் ஆயுதம் ஏந்திய படைகளே தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்ற நிலையிலேயே தமிழ் இனம் வந்து நிற்கின்றதா? என்ற கேள்விகள் ஆராயப்பட வேண்டியவையாகும்.

இந்நிலையில், இவ்வாறான சம்பவங்களை கண்காணிக்கவும், தடுக்கவும் விழிப்புக் குழுக்களை அமைப்பது தொடர்பாக பேசப்படுகின்றது. ஆனால் விழிப்புக் குழுவாக செயற்பட்டவர்களையே வாள்வெட்டுக் குழுக்கள் தாக்கிய சம்பவங்களும் யாழ்ப்பாணத்தில் நடந்தேறியுள்ளன. ஆக, விழிப்புக் குழுவாக செயற்படுவதற்கும் மக்கள் அஞ்சுகின்ற நிலையில், விழிப்புக்களும் வெற்றியளிக்கப்போவதில்லை. இரகசியக் குழுக்களின் செய்பாடுகளே தற்போதைய யாழ்ப்பாணத்தின் சூழலில் ஓரளவு பயன்மிக்கதாக இருக்கும். இதை யாரால் சமூகம் சார்ந்த சிந்தனையோடு செய்யமுடியும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *