மகிந்த ராஜபக்சவின் இராணுவப் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்ட விவகாரம், பெரியளவிலான அரசியல் சர்ச்சையாக மாறியிருக்கிறது. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் அளவுக்கு இந்த விவகாரம் போயிருக்கிறது.
முன்னாள் ஜனாதிபதிக்குரிய பாதுகாப்பு அணியில் இருந்த இராணுவத்தினர் மாற்றப்பட்ட விவகாரம், இந்தளவுக்கு பூதாகாரப்படுத்த வேண்டிய ஒன்றா என்ற கேள்வி சாதாரண மக்களிடம் எழுந்திருக்கிறது.
ஒரு அரசாங்கம் கொள்கை சார்ந்த ஒரு முடிவை எடுப்பதில் எந்தளவுக்குச் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது என்பதற்கு இது சிறந்த உதாரணமாக மாறியிருக்கிறது.
ஆட்சி மாற்றம் நிகழ்ந்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆகப் போகின்ற நிலையிலும் பாதுகாப்புச் சார்ந்த ஒரு விடயத்தில் முடிவை எடுப்பதில், அரசாங்கம் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடுவது ஆபத்தான விடயமாகவும் கூடப் பார்க்கப்படுகிறது.
மகிந்த ராஜபக்ச ஒரு முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அவருக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பு. ஒரு அரசாங்கம் தனது பாதுகாப்பு, புலனாய்வு அமைப்புகளின் ஆலோசனைகளுடன் அதனை நடைமுறைப்படுத்துவதே வழக்கம்.
ஆனால், அதற்கு மாறாக, ஒரு அரசாங்கத்துக்கு மேலாக தமது பாதுகாப்புப் பற்றிய தீர்மானங்களை தாமே எடுக்க எத்தனிக்கும் ஒரு முன்னாள் ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச தென்படுகிறார்.
இராணுவ கொமாண்டோக்களின் பாதுகாப்பு மட்டுமே அவருக்குத் தேவை, அவர்களால் மட்டுமே அவரைக் காப்பாற்ற முடியும் என்பது போன்று ஊடகங்களிலும், அரசியல் மட்டத்திலும் மகிந்த ராஜபக்ச தரப்பினால் ஒரு மாய விம்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
போர் இல்லாத சூழலிலும், இராணுவக் கொமாண்டோக்களின் பாதுகாப்பில் தான் வலம் வர வேண்டும் என்ற அவரது எதிர்பார்ப்பு, பாதுகாப்பு நோக்கத்தைக் கொண்டதாகத் தெரியவில்லை.
விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்ட நிலையில், மகிந்த ராஜபக்சவுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பது, மிகமிக குறைந்தளவிலானதாக மாறிவிட்டது.
இராணுவப் பாதுகாப்பு விலக்கப்பட்டமைக்கு அதுமட்டும் காரணமல்ல.
யாருக்கும் இராணுவப் பாதுகாப்பு அளிப்பதில்லை என்று அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ள கொள்கை சார்ந்த முடிவின் அடிப்படையிலும் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அரசாங்கத்தின் இந்தக் கொள்கை சார்ந்த முடிவு, ஏற்கனவே எல்லா இடங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு கடைசியாகவே மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அணியில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்குக் கூட விசேட அதிரடிப்படையினர் தான் பாதுகாப்பு அளிக்கின்றனர். விசேட அதிரடிப்படையினருக்கான பயிற்சிகள் கூட வெளிநாட்டு நிபுணர்களினால் வடிவமைக்கப்பட்டது தான்.
ஆரம்பகாலத்தில் இருந்தே முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை விசேட அதிரடிப்படை தான், கவனித்து வந்தது. போர்க்காலத்தில் தான், இராணுவத்தின் கொமாண்டோப் படைப்பிரிவின் 4ஆவது பற்றாலியன், முக்கிய பிரமுகர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் பிரிவாக மாற்றப்பட்டது.
கொமாண்டோ படைப்பிரிவின் பாதுகாப்பு விலக்கப்பட்ட பின்னர், மகிந்த ராஜபக்ச ஏதோ பாதுகாப்பு இல்லாத நிலையில் இருப்பது போன்று பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. அவரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படும் என்றெல்லாம் அச்சமூட்டப்படுகின்றன.
முன்னைய ஆட்சிக்காலத்தில் இராணுவத்தின் செயற்பாடுகள் எல்லா மட்டங்களிலும் பரவிக் கிடந்தது. நாட்டைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுதல் என்பதற்கு அப்பால் சிவில் பணிகளில் ஈடுபடுதல், தலையிடுதல், சட்டம் ஒழுங்கை கவனித்தல் என்று இரராணுவச் செயற்பாடுகள் அனைத்து இடங்களிலும் வியாபித்திருந்தன.
இந்த இராணுவ மயமாக்கலுக்கு முடிவுகட்டும் ஒரு நீண்ட திட்டத்தின் ஒரு பகுதியாகவே, முக்கிய பிரமுகர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் பணியில் இருந்து இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டனர்.
இதுபோன்று பல்வேறு வேலைத் திட்டங்களில் இருந்து இராணுவத்தினர் விரைவில் விலக்கிக் கொள்ளப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில், சுண்டிக்குளத்தை தேசிய பூங்காவாக மாற்றும் திட்டம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் நடந்த கலந்துரையாடல் ஒன்றில், அந்தப் பகுதியில் படையினரால் நடத்தப்படும் விடுதிகள் தொடர்பாக, அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேராவிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதற்குப் பதிலளித்த அமைச்சர், இராணுவத்தினர் எவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும், எவற்றில் ஈடுபடக் கூடாது என்பது பற்றிய கொள்கை ரீதியான தீர்மானங்கள் படிப்படியாக நடைமுறைக்கு வரும் என்று தாம் நம்புவதாக குறிப்பிட்டிருந்தார்.
அவ்வாறான ஒரு கொள்கைத் தீர்மானத்தின் ஒரு கட்டமாகவே, முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பில் இராணுவத்தினரை ஈடுபடுத்துவதில்லை என்ற முடிவும் எடுக்கப்பட்டிருக்கிறது.
பாதுகாப்பு மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கூட இதனைக் கருதலாம்.
சிவில் செயற்பாடுகளில் இருந்து இராணுவத்தை விடுவித்தல், என்பது, இராணுவத்தை முன்னிலைப்படுத்தி அரசியல் நடத்தியவர்களுக்கும், அரசியல் செல்வாக்கில் இராணுவத்தில் நிலைத்திருப்பவர்களுக்கும், அதிர்ச்சி தரும் முடிவாகத் தான் இருந்திருக்கும்.
அதைவிட, இராணுவத்துக்குள் இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி, அரசாங்கத்தை மிரட்டுகின்ற போக்கிற்கு முடிவுகட்டுகின்ற ஒரு நடவடிக்கையாகவும் கூட இதனைக் கருதலாம்.
மகிந்த ராஜபக்ச இராணுவப் பாதுகாப்பு விலக்கப்பட்டதை வைத்து மிகப் பெரிய அரசியல் பிரசாரத்தை முன்னெடுத்திருக்கிறார்.
போர்க்குற்றங்களுக்கான தம்மை மின்சாரக் கதிரைக்கு அனுப்ப முயற்சி செய்வதாக பிரசாரம் செய்து அனுதாபம் தேட முனைந்த அவர் இப்போது, இராணுவப் பாதுகாப்பு விலக்கப்பட்ட விவகாரத்தை வைத்து அரசியல் இலாபம் தேட முனைகிறார்.
ஆனாலும், அரசாங்கம் இந்த விடயத்தில் மகிந்த ராஜபக்சவின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், முடிவை நடைமுறைப்படுத்தியிருக்கிறது.
இதன் மூலம், அரசாங்கம் இந்த விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கிறது என்பது வெளிப்பட்டிருக்கிறது. இது மகிந்த ராஜபக்சவுக்கு ஒரு வகையில் அதிர்ச்சி தரும் விடயமாகவே இருக்கும்.
இலங்கை அரசியலில் இராணுவத்தின் செல்வாக்கு கடந்த காலங்களில் அதிகமாகவே இருந்து வந்திருக்கிறது.
அதிலும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்த மகிந்த ராஜபக்ச, தனக்கு விசுவாசமான ஒரு அணியை இராணுவத்துக்குள் உருவாக்கி வைத்திருந்தார்.
அவர்களை தமது தனிப்பட்ட தேவைகளுக்கும் கூட பயன்படுத்தியிருப்பதான குற்றச்சாட்டுகளும் கூட இருக்கின்றன.
இப்படியான நிலையில், இராணுவப் பாதுகாப்பு நீக்க விடயத்தை அவரால் அவ்வளவு இலகுவாக ஜீரணித்துக் கொள்ள முடியாது தான்.
அதேவேளை, மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை விலக்கிக் கொண்ட விவகாரத்தில், அவருக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சிங்கள மக்களை நம்பவைக்க வேண்டிய அவசியமும் அரசாங்கத்துக்கு இருக்கிறது.
மற்றொரு புறத்தில், தாம் ஓரங்கட்டப்படுகிறோம் என்று இராணுவம் உணர்ந்து கொள்ளாத வகையில் செயற்பட வேண்டிய கட்டாயமும் அரசாங்கத்துக்கு இருக்கிறது.
அரசாங்கத்துக்கு எதிரான உணர்வுகளை இராணுவத்துக்குள் தூண்டி விடுவதற்கான வாய்ப்புகள் இப்போது அதிகம். அத்தகையதொரு சூழலை, உருவாக்கிக் கொள்ளாத வகையில், பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தான் அரசாங்கத்தின் வெற்றி தங்கியிருக்கிறறது.
அது எந்தளவுக்குச் சாத்தியமானது என்பதை இப்போது அனுமானிக்க முடியாது. ஆனாலும், சிக்கலான இந்தப் பாதையைக் கடந்து செல்வது அரசாங்கத்துக்கு முக்கியமானது.
அது மகிந்த ராஜபக்சவைச் சமாளிப்பதில் மட்டுமன்றி, ஒட்டுமொத்த நாட்டினதும் நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கும் அவசியமானது.