Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » புதிய அரசியல் கூட்டணி நிலைத்து நிற்குமா? -கபில்

புதிய அரசியல் கூட்டணி நிலைத்து நிற்குமா? -கபில்

பல்வேறு உதிரிக் கட்சிகளை ஒன்றிணைத்து, ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி என்ற புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பித்திருக்கிறார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ்.ஆனந்தசங்கரி.

பத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் இந்தப் புதிய அணியில் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றில் ஒரு சிலவே இதற்கு முன்னர் மக்களால் அறியப்பட்டவை. மற்றையவை எப்போது- யாரால்- எங்கு தொடங்கப்பட்டன என்பது கூடப் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது.

இந்தக் கூட்டணியில், இணைந்துள்ள அமைப்புகள் என்று பார்ப்பதை விட, இணைந்துள்ள தனிநபர்கள் என்ற வகையில், ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா, பிரபா கணேசன், குமரகுருபரன், உதயராசா, பிரபாகரன் போன்றவர்கள் அரசியலில் சற்று அறிமுகமானவர்கள்.

இவர்களில் பெரும்பாலானவர்கள், முன்னைய அரசாங்கத்தின் காலத்தில், மகிந்த ராஜபக்சவின் எடுபிடிகளாக – அமைச்சர்களாக அல்லது இணைப்பாளர்களாக இருந்தவர்கள் என்பது இவர்களின் மேலதிக தகைமையாகும்.

பத்து தமிழ் கட்சிகள், அமைப்புகள் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளன என்பது, வெளியரங்கில் ஆச்சரியமாகப் பார்க்கப்படக் கூடிய விடயமாகவே இருந்தாலும், இத்தகையதொரு கூட்டணி இன்னமும் முழுமையாக அரசியல் கூட்டணியாக உருவெடுக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்போதைக்கு இது தேர்தல் கூட்டணியாக இருக்காது என்றும், தேவைப்படும் போது அவ்வாறான ஒன்றாக மாற்றமடையும் என்றும் பிரபா கணேசன் தெரிவித்திருக்கிறார்.

சம்பந்தனால் ஓரம்கட்டப்பட்ட பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான ஒரு அரசியல் கூட்டணியை உருவாக்குவதே ஆனந்தசங்கரியின் அண்மைக்கால இலக்காக இருந்து வந்தது.

கூட்டமைப்பு வடக்கு, கிழக்கை மையப்படுத்தியே கூட்டணியை உருவாக்கியது. ஆனால், ஆனந்தசங்கரி இப்போது உருவாக்கியிருக்கின்ற புதிய கூட்டணி, வடக்கு, கிழக்குக்கு வெளியிலும் உள்ள கட்சிகளை உள்வாங்கியிருக்கிறது.

இந்தப் புதிய அரசியல் கூட்டணியில் இடம்பெற்றிருக்கின்ற கட்சிகள் பெரும்பாலும் தேர்தல் அரசியலில் தோல்வி கண்டவையாக இருப்பது ஒரு முக்கிய ஒற்றுமை

இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி மாத்திரமே நாடாளுமன்றத்தில் ஆசனத்தைக் கொண்டிருக்கிறது. மற்றக் கட்சிகள் அண்மைய நாடாளுமன்றத் தேர்தல் வரை போட்டியிட்டு தோல்வியடைந்தவை.

தற்போது தமிழ் மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்கு எந்தக் கட்சியும் முன்வரவில்லை என்பதால், அதுபற்றிக் குரல் கொடுக்கவே புதிய கூட்டணியை ஆரம்பித்திருப்பதாக, இதன் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், தமிழ் மக்கள் இப்போது எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள், முன்னைய மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது உருவாக்கப்பட்டவையும் அவற்றின் நீட்சியுமே என்பதை மறந்து விட முடியாது.

அரசியல் கைதிகள் விவகாரம், உயர் பாதுகாப்பு வலய நிலங்கள் மீளளிப்பு விவகாரம், மீள்குடியேற்ற விவகாரம், இராணுவ மயமாக்கல் விவகாரம் என்று தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எதனை எடுத்துக் கொண்டாலும், அது மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது ஏற்படுத்தப்பட்டவையே என்பதில் சந்தேகமில்லை.

காணிகள் ஒப்படைப்பு. படைகள் விலக்கம், அரசியல் கைதிகள் விடுதலை என்று எந்தப் விவகாரத்தை எடுத்துக்கொண்டாலும், மகிந்த ராஜபக்சவும் அவரது அணியினரும், எதிர்க்குரல் எழுப்பியே வருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில், மகிந்த ராஜபக்சவினால் இந்தப் பிரச்சினைகள் உருவாக்கப்பட்டபோது மௌனிகளாக இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தான், இப்போது அதன் நீட்சியாகத் தொடரும் பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுக்கப் போவதாக கூட்டணி அமைத்திருக்கிறார்கள்.

மகிந்த ராஜபக்சவுடன் இணைந்திருந்து, அவரது அரசாங்கத்தின் தேவைகளையும் அரசியல் நிகழ்ச்சி நிரலையும் நேரடியாக ஆதரித்தவர்களும், அதற்காக மறைமுகமாக ஒத்துழைத்தவர்களும், இப்போது, இன்னொரு முகமூடியுடன் தமிழ்மக்கள் முன் வரத் தொடங்கியிருப்பது வேடிக்கை.

ஆட்சிமாற்றத்தின் பின்னர், இவர்கள் மாறிவிட்டார்கள் என்று கருத முடியாது. ஏனென்றால், கடந்தகால ஆட்சியின் தவறுகளில் தமக்கும் பங்கு இருக்கிறது என்று இவர்களில் யாரும் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரவில்லை.

ஆக, இந்தப் புதிய கூட்டணி என்ன நோக்கத்துக்காக உருவெடுத்திருக்கிறது என்பதை உடனடியாக விளங்கிக் கொள்ள முடியாதுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிக்கவும், அதற்கு மாற்றான அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கவும், பல்வேறு முயற்சிகள் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இதுபற்றி யாழ்ப்பாணத்திலும் தொடர் பேச்சுக்கள், கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

தமிழ் மக்கள் பேரவையும் கூட அத்தகையதொரு நோக்கில் வேறொரு தளத்தில் இருந்து உருவாக்கப்பட்டது. அதுவும் கூட இப்போது ஒரு மக்கள் அமைப்பு என்ற நிலைக்குள் முடங்கிக் கொள்ளும் நிலையில் இருக்கிறது.

தமிழ் மக்கள் பேரவையில் ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியும் இணைவதற்கு எதிர்பார்த்தது, ஆனால், பேரவையில் உள்ளவர்கள் ஆனந்தசங்கரியை அதில் இணைத்துக் கொள்ள விரும்பவில்லை.

இந்தநிலையில், முன்னொரு காலத்தில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் ஒருங்கிணைப்புக் குழு, அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவிகளுக்காக முட்டிமோதிக் கொண்டவர்களும், ஊடகங்களின் ஒருவர் மீது மற்றவர் தீராப் பகையுடன் வசைமாரி பொழிந்தவர்களும் கூட, புதிய கூட்டணியில் ஒன்றாகியிருக்கிறார்கள்.

மிக அண்மையில், மட்டக்களப்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில், இனிமேல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும், அதுவே தமிழ் மக்களுக்கு நன்மையளிக்கக் கூடிய ஒரே வழி என்றும் கூறிய, ஈரோஸ் கட்சியின் தலைவர் பிரபாகரன் கூட இந்தப் புதிய கூட்டணியில் இணைந்திருக்கிறார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தனித்துப் போட்டியிட்ட ஜனநாயகப் போராளிகள் கட்சியும் கூட, இந்த அணியில் இணைந்திருக்கிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஜனநாயகப் போராளிகள் கட்சிக்கு ஆனந்தசங்கரி அழைப்பு விடுத்திருந்தார். அப்போது அதனை நிராகரித்து விட்டு, தனித்துப் போட்டியிட்டவர்கள் இப்போது, ஒன்றிணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏதோ ஒரு கட்சியில் இருந்து அல்லது கூட்டணியில் இருந்து பிரிந்து வந்தவர்களாலேயே இந்தப் புதிய கூட்டணி நிரம்பியிருக்கிறது, இந்தப் புதிய கூட்டணி தமிழ் மக்களின் உரிமைகளுக்காக எவ்வாறு குரல் கொடுக்கப் போகிறது என்று தெரியவில்லை.

ஆனாலும், இது ஒரு பலம்மிக்க அரசியல் கூட்டணியாக உருவெடுக்குமா என்பதில் நிறையவே கேள்விகளும் சந்தேகங்களும் இருக்கின்றன.

இதற்கு ஒரு உதாரணம், முன்னர் மகிந்த ராஜபக்சவின் காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட ஈபிடிபி, அதிலிருந்து விலகி அண்மைய நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து, வீணைச் சின்னத்தில் போட்டியிட்டிருந்தது.

அண்மையில் மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடனான உறவுகளை ஈபிடிபி புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. காலியில் நடந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான மேதினப் பேரணியில் கூட டக்ளஸ் தேவானந்தா பங்குபற்றியிருந்தார்.

வரும் உள்ளூராட்சித் தேர்தலில் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஈபிடிபியும் பேச்சுக்களை நடத்திக் கொண்டு தான் இருக்கின்றன.

இப்படியான சூழலில் தான் ஜனநாயக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலும் ஈபிடிபி இணைந்திருக்கிறது,

தேர்தல் ஒன்றில், இந்த இரண்டு கூட்டணிகளிலும் ஈபிடிபியினால் அங்கம் வகிக்க முடியாது. எங்கு கூடுதல் அரசியல் ஆதாயம் கிடைக்குமோ அங்கேயே ஈபிடிபி தங்கிக் கொள்ளும். அது பெரும்பாலும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாக இருக்கலாம்.

இப்போதைக்கு இந்த கூட்டணி செய்தியாளர் மாநாடுகள், அறிக்கைகளுக்கு அப்பால் எதைச் செய்யப் போகின்றது என்று தெரியவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாகவும், அதனைத் தோலுரிப்பதற்காகவுமே, உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணி, புதிதாக எதையும் செய்யப் போகிறதா அல்லது வழக்கம்போலவே இருக்கப் போகிறதா என்பது சில வாரங்களில் தெரிந்து விடும்.

அதுபோலவே, இந்த ஆண்டு இறுதியிலோ, அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே நடக்கப்போகும் உள்ளூராட்சித் தேர்தலில், இந்தக் கூட்டணி அரசியல் கூட்டணியாக நிலைக்குமா என்பதும் தெரிந்து விடும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *