பரபரப்பான சூழல் ஒன்றில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரும் 13ஆம் திகதி இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.
பிரித்தானியாவில் நடக்கவுள்ள ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்க, வரும் 11ஆம் திகதி லண்டனுக்குச் செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்கிருந்து, புதுடெல்லி செல்லவிருக்கிறார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்தியப் பயணத்தின் வெளிப்படையான நோக்கம், கும்பமேளா மற்றும் அதனையொட்டி ஒழுங்கு செய்யப்பட்டுள்ள சர்வமத மாநாட்டில் பங்கேற்பது தான்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜெயின் என்ற புராதன நகரத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்பட்டு வருகிறது கும்பமேளா. இதற்கு முன்னர் 2004ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
ஷிப்ரா நதிக்கரையில் இந்த ஆண்டு நடக்கும், கும்பமேளாவில், சுமார் ஐந்து கோடி பக்தர்கள் பங்கேற்று புனித நீராடுவர் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த கும்பமேளாவின் இறுதிக் கட்ட நிகழ்வுகளை வரும் 14ஆம் திகதி ஆரம்பித்து வைக்கவிருக்கிறார்.
இந்த நிகழ்வில் தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்கவிருக்கிறார். மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் சிவ்ராஜ்சிங் சௌகான் விடுத்த அழைப்பின் பேரில் தான், அவர் அங்கு செல்கிறார்.
பாஜகவைச் சேர்ந்த சிவ்ராஜ்சிங் சௌகான், மூன்றாவது முறையாக தொடர்ந்து முதலமைச்சர் பதவியில் இருப்பவர். அவர் மூலமே, இந்திய மத்திய அரசாங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கான அழைப்பை விடுத்திருந்தது.
தற்போதைய சூழலில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதுடெல்லி வரவேண்டும் என்று இந்திய மத்திய அரசாங்கம் விரும்பியது. அதற்காகத் தான் இந்த ஏற்பாடு.
கும்பமேளா நிகழ்வில் பங்கேற்ற பின்னர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இருதரப்புப் பேச்சுக்களை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தான், இந்த கும்பமேளா அழைப்பின் முக்கிய விடயம்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம், ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து, தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்குத் தான் மேற்கொண்டார்.
பொதுவாக இலங்கைத் தலைவர்கள் கையாளும் நடைமுறை தான் இது. ஆனாலும், முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது இரண்டாவது பதவிக்காலத்தை ஆரம்பித்தவுடன், இந்தியாவுக்குச் செல்வதற்குப் பதிலாக சீனாவுக்குத் தான் சென்றிருந்தார்.
அது ஒரு புறநடையான விடயமாக அரசியல், இராஜதந்திர அரங்கில் பார்க்கப்பட்டது.
ஆனால் மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கே தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டிருந்ததுடன், இந்தியாவுடனான உறவுகளுக்கும் கூடுதல் முக்கியத்துவத்தை அளித்து வந்திருக்கிறார்.
இந்தநிலையில் அவருக்கு இம்முறை கும்பமேளா என்ற பெயரில் இந்தியாவிடம் இருந்து அழைப்பு வந்திருக்கிறது.
அதிகாரபூர்வ பயணம் அல்லது அரசுமுறைப் பயணம் என்றால், இரண்டு நாடுகளின் வெளிவிவகார அமைச்சுக்களும் இணைந்து கலந்துரையாடி, பயணத் திட்டங்களை வகுக்க வேண்டும். அதற்கு சில நெறிமுறைகள் உள்ளன. காலஅவகாசமும் தேவைப்படும்.
ஆனால், இந்தியாவுக்கு அந்தளவுக்கு பொறுமை இருப்பதாகத் தெரியவில்லை. அவசரமாக சில விடயங்களை பேசுவதற்கு எதிர்பார்ப்பதாகவே தெரிகிறது. அதனால் தான், கும்பமேளாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
இது ஒரு தனிப்பட்ட அழைப்பு. தனிப்பட்ட பயணம். ஆனாலும், இந்தச் சந்தர்ப்பத்தில், தாம் சொல்ல வேண்டிய விடயங்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சொல்வதற்கான வாய்ப்பு, இந்தியப் பிரதமருக்குக் கிடைக்கும்.
ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், இந்திய-இலங்கை உறவுகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், சீன விவகாரத்தினால், இந்தியாவுக்கு அவ்வப்போது குழப்பங்கள் ஏற்படத் தான் செய்கிறது.
ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர், முற்றுமுழுதாகவே சீனாவிடம் இருந்து விலகி விட்டது போன்ற தோற்றப்பாட்டைக் காட்டிய இலங்கை அரசாங்கம், இப்போது மீண்டும் சீனாவுடன் போய் ஒட்டிக் கொண்டிருக்கிறது.
இலங்கையின் பொருளாதார நிலை, மற்றும் மகிந்த ராஜபக்ச போட்டுவிட்டுச் சென்ற முடிச்சு என்பன, சீனாவைத் தவிர வேறெந்த நாட்டினாலும் இலங்கையின் சிக்கல்களைத் தீர்க்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்தி விட்டது.
இதனால், மீண்டும் சீனாவுடனான நெருங்கிய உறவுகள் புதுப்பித்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. கடந்த மாத துவக்கத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
சீனாவுக்கு மேற்கொண்ட பயணம், சீன-இலங்கை உறவுகளை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சீனாவுடனான இலங்கையின் உறவுகள் இந்தியாவுக்கு அச்சமூட்டவில்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சீனப் பயணத்தின் போது எடுக்கப்பட்ட சில முடிவுகளும், முன்வைக்கப்பட்டுள்ள சில யோசனைகளும் தான், இந்தியாவை யோசிக்க வைத்திருக்கிறது.
இந்தியாவினால் தொடர்ந்து எதிர்க்கப்பட்டு வந்த கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை, மீண்டும் ஆரம்பிக்க சீன நிறுவனத்துக்கு இலங்கை அனுமதி அளித்திருக்கிறது.
முன்னதாக, துறைமுக நகரத் திட்டத்தில் சீனாவுக்கு ஒரு பகுதி நில உரிமை கொடுப்பதென, மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இணங்கியிருந்தது. ஆனால் இப்போதைய அரசாங்கம், நிலஉரிமைக்குப் பதிலாக, 99 ஆண்டு குத்தகை என்று உடன்பாட்டு விதியை மாற்றியிருக்கிறது.
இதுகுறித்தோ, அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சீனப் பயணத்தின் போது எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பாகவோ, இந்தியா இதுவரை எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தவில்லை என்பது முக்கியமானது.
இந்த விடயத்தில் இந்தியாவின் மெளனத்தை சம்மதம் என்று தவறாக எடைபோட முடியாது. அதற்காக எதிர்த்துக் குரல் எழுப்பிக் கூச்சல் போடவும் இந்தியா விரும்பவில்லை.
காதும் காதும் வைத்தது போன்று காரியத்தை முடிக்கவே இந்தியா நினைக்கிறது. அதாவது, இராஜதந்திர ரீதியாகவே இந்த விவகாரத்தை அணுக முனைகிறது இந்தியா.
கொழும்புத் துறைமுக நகரத் திட்ட விவகாரத்தில் மாத்திரமன்றி, ரணில் விக்கிரமசிங்கவின் பயணத்தின் போது முன்மொழியப்பட்டுள்ள, அம்பாந்தோட்டை பொருளாதார முதலீட்டு வலயத் திட்டமும் கூட இந்தியாவுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சீனாவிடம் பெற்ற கடன்களை, எப்படியாவது தீர்த்துக் கொள்வதற்கான வழியைத் தான் இலங்கை தேடிக் கொண்டிருக்கிறது.
சீனாவிடம் பெறப்பட்ட 8 பில்லியன் டொலர் கடனை வட்டியுடன் மீளச் செலுத்துவதானால், நாடு பாதாளத்தில் தள்ளளப்பட்டு விடும் என்பதால் அதற்கு மாற்றான திட்டங்களை அரசாங்கம் ஆராய்ந்தே, சில முடிவுகளை எடுத்திருந்தது.
அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தல விமான நிலையம் ஆகியவற்றுக்குப் பெறப்பட்ட கடன்களை பங்குகளாக மாற்றும் அந்த யோசனையை ரணில் விக்கிரமசிங்க சீனாவிடம் முன்வைத்திருந்தார்.
விமான நிலையம், துறைமுகம் என்பனவற்றில் சீனாவுக்கு பங்கை அளிக்கும் இந்த யோசனை தான் இந்தியாவுக்கு அதிக கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
இதன் மூலம், மத்தல விமான நிலையம், அம்பாந்தோட்டைத் துறைமுகம், என்பன சீனாவின் கைக்குச் செல்லலாம் என்று இந்தியா கருதுகிறது.
அம்பாந்தோட்டையில் கடற்படைத் தளத்தை அமைக்கும் ஒரு அடிப்படைத் திட்டம் சீனாவிடம் இருக்கின்ற நிலையில், அதனை சீனாவுக்கு விட்டுக் கொடுப்பது ஆபத்தானது என்று இந்தியா கருதுகிறது.
அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் விமான நிலையம் என்பனவற்றை சீனா இராணுவத் தேவைக்குப் பயன்படுத்தக் கூடும் என்பதாலேயே, இந்தியா அதிக கரிசனை கொண்டிருக்கிறது.
ரணில் விக்கிரமசிங்க, சீனப் பயணத்தின் முடிவில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில், இதுபற்றி அவரிடம் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கடற்படைத் தளத்தை இலங்கையில் அமைப்பதற்கு சீனா அனுமதி ஏதும் கோரவில்லை என்று பதிலளித்திருந்தார் ரணில்.
சீனா இதனை வெளிப்படையாகச் செய்யப் போவதில்லை. மறைமுகமாகவே காய்களை நகர்த்தக் கூடும். அத்தகையதொரு நிலை வரை விட்டு வைக்க இந்தியா தயாராக இல்லை.
அதற்கான சில தகவல்களைப் பரிமாறவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமன்றி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கூட இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத துவக்கத்தில் புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டு இந்தியாவின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா- சீனா- அமெரிக்கா என்ற முத்தரப்புகளையும் சமாளித்துக் கொண்டு செல்லவே இலங்கை முனைகிறது. ஆனால் சீனா விடயத்தில் இந்தியா அதிக கரிசனையைக் கொண்டிருப்பதால், இலங்கைக்கு நெருக்கடியாக இருக்கிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தியப் பயணம் ஒன்றும் மகிழ்ச்சி அளிப்பதாக இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால், இந்தியா தனது இராஜதந்திர மொழிகளில், சொல்லப்போகும் விடயம், அவருக்கு அவ்வளவு இனிப்பானதாக அமைய வாய்ப்பில்லை.