Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » கோத்தா மீதான குண்டுத் தாக்குதல் புலிகளுக்கு வைக்கப்பட்ட பொறியா? -சுபத்ரா

கோத்தா மீதான குண்டுத் தாக்குதல் புலிகளுக்கு வைக்கப்பட்ட பொறியா? -சுபத்ரா

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மீது, கொழும்பு பித்தல சந்தியில் வைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் ஒரு உள்வீட்டு வேலை என்ற தகவலை கடந்த செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார், முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

ராஜபக்ச குடும்பத்தின் பக்கத்துக்கு அனுதாப உணர்வைத் திருப்பும் நோக்கில் தான், இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று அவர் கூறியிருந்தார்.

இதையடுத்தே, கூட்டு எதிரணியினர், ஆளும்கட்சியினருடன், மோதலுக்குச் சென்றனர். அடிதடி நடக்கும் அளவுக்கு சென்று, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையும் ஏற்பட்டது.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஏற்கனவே இறுதிக்கட்டப் போர் பற்றிய பல பரபரப்பான தகவல்களை வெளியிட்டு, ராஜபக்ச குடும்பத்தினருக்கு கடுப்பேற்றியவர். இப்போது, அவர், கூறியிருக்கும் குற்றச்சாட்டு மிகமுக்கியமானது.

எந்தவொரு தீவிரவாதியும், தனது இலக்கில் இருந்து 25 மீற்றருக்கு அப்பால், தற்கொலைக் குண்டை வெடிக்கவைத்திருக்கமாட்டான் என்றும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார்.

அவரது இந்தக் கருத்து, அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் கூறப்பட்ட குற்றச்சாட்டு என்று புறக்கணித்து விடத்தக்கதொன்று அல்ல.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை, ஆரம்பக்கட்டத்தில் இருந்து இறுதி வரை முன்னெடுத்த ஒருவர் என்ற வகையில், சரத் பொன்சேகாவின் இராணுவ அனுபவங்களை எவரும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.

எனவே, தற்கொலைத் தாக்குதல் நடத்தும் போராளிகள் தமது இலக்கு எந்தளவுக்கு நெருக்கும் வரை, காத்திருப்பார்கள் என்பது, அவருக்குத் தெரியாத விடயமல்ல. அத்தகைய தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்றில், அவர் படுகாயமடைந்து, மறுஜென்மம் எடுத்து வந்தவர் என்பதையும் மறந்து விடலாகாது.

இலக்கு நெருங்கி வர முன்னரே, குண்டுவெடிக்க வைக்கப்பட்டதால் தான், அது உள்வீட்டு வேலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எழுப்பியிருக்கிறார்.

ஆனால், அதற்கும் அப்பால், இதுபோன்ற பல சம்பவங்கள், போரின் போது, திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருந்ததா என்ற கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது.

சரத் பொன்சேகா எழுப்பிய இந்தச் சந்தேகத்தின் பின்னால் ஆபத்தான நிகழ்ச்சி நிரல்கள் இருந்திருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை.

போர் ஒன்றில் வெற்றியைப் பெறுவதற்காக, எல்லா விதமான சூழ்ச்சிகளையும், போரிடும் தரப்புகள் செய்வதுண்டு. போரிடும் தரப்புகள், தாம் வெற்றி பெறுவதற்காக அல்லது வெற்றிக்கான சூழலைத் தமக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வதற்காக பல சமயங்களில் தமது சகாக்களையும் கூட பலிகொடுக்கவும் தயங்குவதில்லை.

எனவே, சரத் பொன்சேகா எழுப்பியிருக்கின்ற கேள்வியை அல்லது சந்தேகத்தை இந்தக் கட்டத்தில் புறக்கணித்து விட முடியாது.

அதுபற்றிப் பார்க்க முன்னதாக, கடந்த ஏப்ரல் முதல்வாரம் சத்ஹண்ட சிங்கள வாரஇதழில் வெளியான ஒரு விடயத்தை இங்கு குறிப்பிட வேண்டியிருக்கிறது.

விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்தி, இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் சில உட்கொலைகளை நிகழ்த்தியிருந்தனர் என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.

அவ்வாறான சம்பவங்களில், முக்கியமானது, 1999 டிசெம்பர் 18ஆம் திகதி ஜாஎலவில் ஐதேக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மேஜர் ஜெனரல் லக்கி அல்கம கொல்லப்பட்டதாகும்.

தற்கொலைக்குண்டுத் தாக்குதல் ஒன்றின் மூலமே மேஜர் ஜெனரல் லக்கி அல்கம கொல்லப்பட்டார். இராணுவத் தலைமை அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஐதேகவில் இணைந்து அரசியலில் ஈடுபட்டவர் அவர். ஐதேக ஆட்சிக்கு வந்தால், பாதுகாப்பு பிரதி அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர்.

இராணுவத்தில் ஒரு நட்சத்திரத் தளபதியாகவே இருந்தவர், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முக்கிய அதிகாரியாகவும் பணியாற்றியவர் தான் மேஜர் ஜெனரல் லக்கி அல்கம.

அவர் புலிகளின் பெயரில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக, விசாரணைகளில் தெரியவந்த போதும், அதுபற்றி இப்போது ஓய்வுபெற்று விட்ட முன்னாள் இராணுவப் புலனாய்வு பணிப்பாளரிடம் விசாரணை நடத்த அனுமதி கோரியபோதும், அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அதனை நிராகரித்து விட்டதாக சத்ஹண்ட செய்தியில் கூறப்பட்டிருந்தது.

இராணுவத்தினரின் உறுதி குலைந்து விடும் என்பதற்காகவே அந்த விசாரணைகளை சந்திரிகா குமாரதுங்க முடக்கியதாகவும் கூறப்பட்டிருந்தது.

அதுபோன்று, 2006ஆம் ஆண்டு விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியான செனிவிரத்ன கண்டி- திகணவில் கிளைமோர் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதும் திட்டமிட்ட ஒரு உள்வேலை என்று சத்ஹண்ட குறிப்பிட்டிருந்தது.

இந்தச் சம்பவங்களுக்கு புலிகள் மீதே பழிபோடப்பட்டது. அவர்களும் அதனை நிராகரிக்கவில்லை.

ஒருவகையில் அது புலிகளுக்கு சாதகமான பிரசாரங்களை ஏற்படுத்தியதால் அவர்கள் அமைதியாக இருந்து விட்டனர். ஆனால் விளைவுகள் அதற்கு மாறானவையாக இருந்தன.

கோத்தாபய ராஜபக்ச மீதான குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்துக்கு இப்போது வருவோம்.

கோத்தாபய ராஜபக்ச மீதான தாக்குதலை அடுத்தே, விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான எல்லாத் தொடர்புகளையும் நிறுத்திக் கொள்ளுமாறும், சமாதான ஏற்பாட்டாளரான நோர்வேக்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அறிவித்தது.

அத்துடன், விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்வதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்தது.

2006 ஓகஸ்ட் மாதம் போர் போர் வெடித்த போதிலும், அதற்குப் பின்னரும் கூட அமைதிப் பேச்சுக்களை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டே வந்தன. அதில் அரசாங்கம் ஆர்வம் காட்டியிருக்கவில்லை.

ஏனென்றால், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடனேயே, புலிகள் இயக்கத்தை போர் மூலம், அழிப்பதற்குத் திட்டமிட்டிருந்தார். அவர் சமாதானப் பேச்சுக்களில் இறங்குவதற்குத் தயாராக இருக்கவில்லை.

மோதல்களின் மத்தியிலும், மீண்டும் போர்நிறுத்தத்தை ஏற்படுத்தி, அமைதிப்பேச்சுக்களில் புலிகளை ஈடுபட வைப்பதற்கு, நோர்வேயும் வேறு சில தரப்புகளும் மேற்கொண்டு வந்த முயற்சிகளை ஒரேயடியாக நிறுத்துவதற்கு அரசாங்கத்துக்கு ஒரு காரணம் தேவைப்பட்டது.

அப்படியொரு சந்தர்ப்பத்தில் தான், பித்தல சந்தி குண்டுவெடிப்பும் நிகழ்ந்திருந்தது.

முழுஅளவிலான ஒரு போரை ஆரம்பிப்பதற்கான- அமைதிப் பேச்சுக்களில் இருந்து புலிகளை ஒரேயடியாக வெளியேற்றுவதற்கான- சமாதான முயற்சிகளை முற்றிலுமாக நிறுத்த வைப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே அது அமைந்து போனது.

சரத் பொன்சேகா எழுப்பியிருக்கின்ற சந்தேகங்களின் அடிப்படையில் பார்க்கப் போனால், இந்தச் சம்பவத்தினால் அரசாங்கமே ஆதாயமடைந்திருக்கிறது என்பதை உறுதியாகவே கூறலாம்.

இந்தக் கோணத்தில் பார்க்கப் போனால், புலிகளைப் பொறிக்குள் தள்ளிய ஒரு நிகழ்வு என்று கூட குறிப்பிடலாம். இந்தப் பொறியைப் புலிகள் தாமாகவே உருவாக்கிக் கொண்டனரா அல்லது அரசாங்கம் உருவாக்கிய பொறியில் அவர்கள் வீழ்ந்தனரா என்பது தான் இப்போதுள்ள கேள்வி.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரிலும் பல்வேறு சூழ்ச்சிகள் கையாளப்பட்டன.

தமிழர் தரப்பில் உள்ள நியாயங்கள் காரணமாக இருந்த சர்வதேச ஆதரவை இல்லாமல் ஆக்குவதற்கும், தமிழரின் ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டம் என்று முத்திரை குத்துவதற்கும் நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட வழிமுறைகளும் அரசதரப்பினால் கையாளப்பட்டன.

நாடாளுமன்றத்தில் சரத் பொன்சேகா எழுப்பியிருக்கும் சந்தேகமும், அத்தகையதொன்று தானா என்ற சந்தேகம், இப்போது எழுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *