ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் முன்னேற்றம் இல்லாத விடயங்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தனது வாய்மூல அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று, அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் கோரியுள்ளன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், எதிர்வரும் 27ஆம் நாள், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பான வாய்மூல அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.
இந்த அறிக்கையில் இடம்பெற வேண்டிய விடயங்களைச் சுட்டிக்காட்டி, அனைத்துலக மனித உரிமை அமைப்புகள், ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.
போரம் ஏசியா, பிரான்சிஸ்கன்ஸ் இன்ரநசனல், மனித உரிமைகள் கண்காணிப்பகம், அனைத்துலக ஜூரிகள் ஆணைக்குழு, அனைத்துல வகையான பாகுபாடுகளுக்கும் எதிரான அனைத்துலக அமைப்பு, அனைத்துலக மனித உரிமைகள் சேவை ஆகிய அமைப்புகள் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளன.
கடந்த ஆண்டு பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், இன்னமும் நிறைவேற்றப்படாதுள்ள விடயங்கள், எந்தெந்த பரப்பில் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் குறைபாடுகள் உள்ளன, உடனடியாக நடைமுறைப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை இந்த வாய்மூல அறிக்கையில் சுட்டிக்காட்ட வேண்டும்.
பேரவையில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று நம்புகிறோம் என்றும் அந்தக் கடிதத்தில், மனித உரிமை அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன