அண்மைய இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, சிறிலங்கா- சீன நட்புறவுக் கிராமத்தில் 100 வீடுகளை அமைத்துக் கொடுக்கவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
சீன அரசாங்கம் விமானம் மூலம் அனுப்பிய அவசர உதவிப்பொருட்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில், சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவிடம் கையளித்த பின்னர், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங்.
“சீன-சிறிலங்கா நட்புறவுக் கிராமத்தில், இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1.5 மில்லியன் டொலர் செலவில், சீனா 100 வீடுகளை அமைத்துக் கொடுக்கும்.
சிறிலங்காவுக்கு நாம் சிறந்த வகையில் உதவுவோம். இரண்டு நாடுகளும் பல ஆண்டுகளாக நெருக்கமான உறவுகளை பேணி வருகின்றன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வாடகை விமானத்தில் சீனா அனுப்பியுள்ள 15 மில்லியன் யுவான் (2.28 மில்லியன் டொலர்) பெறுமதியான உதவிப்பொருட்களில், 3000 கூடாரங்கள், மடிக்கும் கட்டில்கள், மற்றும் உதவிப் பொருட்கள் உள்ளடங்கியுள்ளன.