சிறிலங்கா கடற்படையினரின் வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பான தகவல்களை அம்பலப்படுத்திய, கடற்படையின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான கொமாண்டர் கே.சி.வெலகெதர, பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவினால் நியமிக்கப்பட்ட இராணுவ நீதிமன்றத்தினால், குற்றவாளியாக காணப்பட்டதையடுத்தே, கொமாண்டர் கே.சி.வெலகெதர பதவியிறக்கப்பட்டுள்ளார்.
கடற்படைத் தலைமையகத்துக்கு தகவல் தெரிவிக்காமல் வெளிநாடு சென்றார், கடற்படையை இழிவுபடுத்தினார் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக, இவர் மீது இராணுவ நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டது.
கடந்த மார்ச் 21 ஆம் நாள் தொடக்கம், ஏப்ரல் 13ஆம் நாள் வரை, அனுமதியின்றி விடுமுறையில் இருந்தார் என்பதாலும் இந்தக் காலப்பகுதியில் கடற்படைத் தலைமையகத்துக்குத் தெரியப்படுத்தாமல் வெளிநாடு சென்றார் என்பதாலும், இராணுவ நீதிமன்றம், கொமாண்டர் கே.சி.வெலகெதவின் மூப்புவரிசையை நான்கு ஆண்டுகளால் குறைத்து, கப்டனாகப் பதவியிறக்கம் செய்துள்ளது.
சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
கொமாண்டர் வெலகெதர, சிறிலங்கா கடற்படையின் புலனாய்வு அதிகாரியாகப் பணியாற்றியவர். திருகோணமலையில் இருந்த கடற்படை சித்திரவதை முகாமுக்குப் பொறுப்பாக இருந்த அவர், அவுஸ்ரேலியாவுக்கு ஆட்களைக் கடத்தும் குழுவினருடன் தொடர்பில் இருந்தவர்.
முன்னைய ஆட்சிக்காலத்தில் நடந்த வெள்ளை வான் கடத்தல்கள் மற்றும் சட்டவிரோத ஆட்கடத்தல்கள் பற்றிய தகவல்களை அவர் தற்போதைய அரசாங்கத்தின் விசாரணைகளில் ஒப்புக்கொண்டிருந்தார்.
இவர் மீது இராணுவ நீதிமன்றம் நடவடிக்கை எடுத்திருப்பது குறித்து சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன கவலை வெளியிட்டுள்ளார்.
தம்மை நம்பி, தகவல்களை வெளியிட்ட கொமாண்டர் வெலகெதரவுக்கு ஏற்பட்டுள்ள நிலை கவலையளிப்பதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.