பேச்சாளர்களின் பட்டியலில் கலாநிதி தயான் ஜெயதிலகவின் பெயர் காணப்பட்ட போது, இதற்கான அனுமதியை வழங்குவதற்கு மங்கள மறுத்தார். இக்கருத்தரங்கானது அதிபர் செயலகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டது என்பதைக் கூட மங்கள தனது கவனத்திற் கொள்ளவில்லை.
இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.
கருத்தரங்கு ஒன்றை நடத்துவதற்கு லக்ஸ்மன் கதிர்காமர் நிறுவகத்தின் மண்டபம் ஒன்றை தந்துதவுமாறு சில வாரங்களுக்கு முன்னர் கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டது. மைத்திரிபால சிறிசேன அந்தக் கருத்தரங்கின் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன் இக்கருத்தரங்கானது அதிபர் செயலக அதிகாரி ஒருவராலேயே ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.கருத்தரங்கை நடத்துவதற்கான மண்டபத்தைத் தந்துதவுமாறு கோரி அனுப்பப்பட்ட விண்ணப்பத்தை, வெளிவிவகார அமைச்சின் கீழ் செயற்படும் கதிர்காமர் நிறுவகமானது இந்த அமைச்சின் அமைச்சரான மங்கள சமரவீரவின் அனுமதிக்காக அனுப்பியது.
அவர் அக்கருத்தரங்கில் உரையாற்றவுள்ள பேச்சாளர்களின் பட்டியலை வாசித்தார். இப்பட்டியலில் கலாநிதி தயான் ஜெயதிலகவின் பெயர் காணப்பட்ட போது, இதற்கான அனுமதியை வழங்குவதற்கு மங்கள மறுத்தார். இக்கருத்தரங்கானது அதிபர் செயலகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டது என்பதைக் கூட மங்கள தனது கவனத்திற் கொள்ளவில்லை.
மங்களவின் அனுமதி கிடைக்கவில்லை என மைத்திரிக்கு தகவல் வழங்கப்பட்டது. மைத்திரியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பிறிதொரு இடத்தில் இக்கருத்தரங்கை ஒழுங்குபடுத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றன. இதன்பிரகாரம் இக்கருத்தரங்கானது பண்டாரநாயக்க ஞாபகர்த்த அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
புலிகளின் நிகழ்ச்சி நிரல்:
தயான் மற்றும் மங்களவின் வெளிவிவகாரக் கோட்பாடுகள் மைத்திரியின் வெளிவிவகாரக் கோட்பாடுகளாகவே நோக்கப்படுகின்றன. இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் விமர்சிக்கப்பட்டுள்ளார். கருத்தரங்கு இடம்பெற்ற அன்றைய நாளன்று, புலிகளின் நிகழச்சி நிரலுக்கு ஏற்பவே மங்களவும் ரணிலும் செயற்படுவதாக தயான் தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருந்த அதேவேளையில் இக்கருத்தரங்கை ஒழுங்குபடுத்தியிருந்த அதிபர் செயலகமானது இதனை மைத்திரியின் வெளியுறவுக் கோட்பாடு என விளக்கியது. தற்போது, மைத்திரியின் வெளியுறவுக் கோட்பாட்டுத் தத்துவாசிரியராக தயான் மாறியுள்ளார்.
இறுதியாக இடம்பெற்ற அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்ச வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தயான் பணியாற்றினார். இத்தேர்தல் பரப்புரையில் மைத்திரி மற்றும் ரணில் ஆகியோர் புலிகளினதும் மேற்குலகினதும் கைப்பாவைகள் என தயான் ஜெயதிலக குறிப்பிட்டிருந்தார். மகிந்த தேர்தலில் தோல்வியுற்ற பின்னர் மெதமுலனவில் தங்கியிருந்த போது மீண்டும் அரசியலில் ஈடுபடுமாறு மகிந்தவுக்கு உத்வேகம் கொடுத்த முன்னணி நபர்களில் தயானும் ஒருவராவார்.
மகிந்த மீண்டும் ஆட்சிக்கு வருவதை ஆதரித்து நுகேகொடவில் மேற்கொள்ளப்பட்ட பேரணி ஒன்றில், தனது அறிக்கையை வாசிக்குமாறு தயானிடம் கையளித்திருந்தார் மகிந்த. அறிக்கைகளின் வாயிலாக, மகிந்தவின் அறிக்கையைத் தயார்ப்படுத்துவதில் தயான் மிக முக்கிய பங்காற்றியுள்ளார். மைத்திரி, சந்திரிக்கா மற்றும் ரணில் ஆகியோர் மீது தேசத்துரோகி என்கின்ற முத்திரையை தயான் குத்தினார்.
மைத்திரி மிகவும் சிறப்பான வெளிவிவகாரக் கோட்பாட்டைப் பின்பற்றுகிறார் என்பதை பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் இடம்பெற்ற கருத்தரங்கின் போது தயான் அவதானித்தார். தயான் தனது உரையில் மைத்திரியைப் போற்றியும் ரணில் மற்றும் மங்களவைத் தாக்கியும் கருத்துக்களைக் குறிப்பிட்டதை மைத்திரி செவிமடுத்தார். இதன்பின்னர் இவர் மைத்திரி-ரணில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான பாரியதொரு அரசியற் போரை மேற்கொண்டார்.
இக்கருத்தரங்கிற்குப் புறப்படுவதற்கு முன்னரும் தயான் ஜெயதிலக, ராஜபக்சாக்களைச் சந்தித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இக்கருத்தரங்கு முடிவடைந்ததன் பின்னர் மங்கள மற்றும் ரணில் மீது குற்றம் சுமத்துவதற்கான வாய்ப்பை ரூபவாகினி தொலைக்காட்சி சேவை தயானுக்கு வழங்கியது. தற்போது, மைத்திரியின் உத்தரவாதத்துடன் தொடர்ந்தும் ரணில் மற்றும் மங்கள மீதான தயானின் வாய் மூலத் தாக்குதல்கள் இடம்பெறுகின்றன.
இக்கருத்தரங்கில் மிக முக்கிய சம்பவம் ஒன்றும் இடம்பெற்றது. மைத்திரியின் வெற்றிக்காகவும் மகிந்தவின் தோல்விக்காகவும் பணியாற்றிய கலாநிதி ஜெயதேவ உயன்கொடவும் இக்கருத்தரங்கில் உரையாற்றியிருந்தார். ஜனவரி 08 அன்று இடம்பெற்ற தேர்தலில் மக்கள் தமது வாக்குகளை வழங்கி மைத்திரியைத் தெரிவு செய்தனர் என கலாநிதி ஜெயதேச உயன்கொட தெரிவித்தார்.
இவர் மக்கள் வழங்கிய வாக்குகளை ஐ.தே.க வாக்குகள், சிவில் சமூக அமைப்புக்களின் வாக்குகள் மற்றும் சிறுபான்மை வாக்குகள் என மூன்றாக வகுத்துள்ளார். ஆகவே மக்கள் வழங்கிய வாக்குகளைப் பயன்படுத்தி மைத்திரி தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் என இவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த வாக்கு வங்கிக்கு மைத்திரியே தலைமை வகிக்கின்றார். அமெரிக்காவின் ஒபாமா, பிரிட்டனின் கமரூன், யப்பானின் அபே, இந்தியாவின் மோடி, ஜேர்மனியின் அஞ்சலா மேர்க்கல் ஆகியோர் மைத்திரியின் தலைமைத்துவத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.
ராஜபக்சவிற்கு ஆதரவான குழுக்கள்:
ராஜபக்ச ஆதரவுக் குழுக்களை மைத்திரி வெற்றி கொள்ள வேண்டும். மிகவும் கெட்டித்தனமான வெளிவிவகாரக் கோட்பாடுகளின் வல்லுனர் மற்றும் உயர் இராஜதந்திரியுமான தயான் ஜெயதிலகவை மைத்திரி வெல்ல வேண்டும். தயான் போன்ற தனிநபர்களின் மனங்களையும் மைத்திரி வெல்ல வேண்டும்.
ரணில் ஆதரவு மற்றும் சந்திரிக்கா ஆதரவு அமைப்புக்களை மகிந்த தனது பக்கம் வென்றெடுத்திருந்தார். இதற்கு பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். ரணில் மற்றும் சந்திரிக்காவுடன் செயற்பட்ட போது, பீரிஸ் சமஸ்டி ஆட்சியை விரும்பியிருந்தார். பீரிஸ் கூறிய அளவிற்குக் கூட ரணில், அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான கருத்துக்களைக் கூறியிருக்கவில்லை. பீரிஸ் சமாதான ஆர்வலராகச் செயற்பட்டிருந்தார்.
அத்துடன் இவர் மேற்குலக அரச சார்பற்ற நிறுவனங்களின் மிகப் பலமான ஆதரவாளராகவும் செயற்பட்டார். சுருக்கமாகக் கூறின், மகிந்த தரப்பினரால் பீரிஸ் தேசத் துரோகி எனவும் முத்திரை குத்தப்பட்டிருந்தார். இவ்வாறானதொரு பண்புகளைக் கொண்டிருந்த பீரிஸ் பின்னர் மகிந்தவால் தனது பக்கம் இணைக்கப்பட்டார்.
பீரிஸ், ராஜபக்சாக்களுடன் இணைந்த பின்னர், இவர் மேற்குலக நாடுகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமஸ்டி ஆகியவற்றை எதிர்த்து பரப்புரை மேற்கொள்ளத் தொடங்கினார். மைத்திரியுடன் இணைந்த பின்னர் தயான் எவ்வாறு ரணில் மற்றும் மங்களவை எதிர்த்து தற்போது பரப்புரை செய்கிறாரோ அதேபோன்றே பீரிசும் மகிந்தவுடன் இணைந்த பின்னர் தனது எதிரிகளான விமல் மற்றும் ஹெல உறுமயவை எதிர்த்தார்.
தன்னிடம் வருகின்ற மகிந்த ஆதரவுக் குழுக்களிடம் ஜனவரி 08 தேர்தல் விளக்கவுரையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மைத்திரி கூறவேண்டும். ஆனால் மாறாக தயானே மைத்திரியிடம் தோற்கடிக்கப்பட்ட மகிந்தவின் வாக்கு வங்கியை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது எனக் கூறுகிறார். இது முரண்பாடானது.
கருத்தரங்கு முடிந்த கையோடு மைத்திரி தேநீர் அருந்துவதற்காக உயன்கொடவிற்கு அருகில் சென்றார். மைத்திரியின் இந்தச் செயலானது தயானைக் காப்பாற்றும் நோக்கத்தைக் கொண்டதா அல்லது இல்லையா என்பது இன்னமும் தெரியவில்லை.