வரப்போகும் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியுமா என்று தேசிய சுதந்திர முன்னணியின் விமல் வீரவன்ச மற்றும் பிவிதுரு ஹெல உறுமயவின் உதய கம்மன் பில ஆகியோருக்கு சவால் விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலரும் அமைச்சருமான மகிந்த அமரவீர.
”விமல் வீரவன்சவும், உதய கம்மன்பிலவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உதவியுடன் தான் தப்பிப் பிழைத்தவர்கள். அவர்களுக்கென்று தனியான வாக்கு வங்கி கிடையாது.
தமது அரசியல் நலனுக்காக, சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குப் பின்னால் ஒட்டிக் கொண்டவர்கள் அவர்கள்.
ஐ.நா பணியகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி அனைத்துலக சமூகத்துக்கு கோபத்தை ஏற்படுத்தினார் விமல் வீரவன்ச. அதன் காரணமாகவே மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தோற்கடிக்கப்படுவதற்கான வழி திறக்கப்பட்டது.
ராஜபக்ச அரசாங்கத்தை 162 நாடுகளின் எதிரியாக இவர்களே மாற்றினர். அவர்கள் பற்றி சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் நன்றாக அறிவார்கள்.” என்றும் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.