விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சியைத் தடுப்பதிலேயே சிறிலங்காவின் பாதுகாப்பு அமைப்புகள் கவனம் செலுத்துவதால், ஐஎஸ் தீவிரவாதம் போன்ற புதிய அச்சுறுத்தல்களில் கவனம் செலுத்துவது பாதிக்கப்படுவதாக அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள, 2015ஆம் ஆண்டுக்கான தீவிரவாதம் தொடர்பான அறிக்கையிலேயே அமெரிக்கா இவ்வாறு தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சியைத் தடுப்பதில் சிறிலங்கா பாதுகாப்பு அமைப்புகள் கவனம் செலுத்தி வருகின்றதானது, இலங்கையர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைவது தொடர்பாக கவனம் செலுத்துவதை பாதித்துள்ளது.

அதேவேளை விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்பு இன்னமும் உயிர்ப்புடன் செயற்பட்டு வருகிறது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம், பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றுடன் சிறிலங்கா ஒத்துழைத்து வருகிறது எனினும், தீவிரவாத முறியடிப்பு உதவிகள் சிறிலங்காவுக்கு கடந்த ஆண்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வழங்கப்பட்டன.

அமெரிக்க கடலோரக் காவல்படை, சிறிலங்கா கடற்படைக்கு கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகளை அளிக்கிறது. என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.