கொழும்பில் உள்ள சில ஐரோப்பிய நாடுகளின் தூதரகங்களின் விசா நடை முறைகளால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கான விசா வழங்கும் நடை முறையை தற்போது சுவிஸ் தூதரகம் மட்டுமே கையாண்டு வருகின்றது.
முன்னர் விசாவுக்கான விண்ணப்பிப்பவர்கள் கொழும்பில் உள்ள அந்தந்த நாட்டு தூதரகங்கள் ஊடாக விண்ணப்பிப்பதே இது வரை காலமும் நடைமுறையில் இருந்து வந்தது.
எனினும், கடந்த ஆண்டு தொடக்கம் இந்த நடைமுறை மாற்றப்பட்டுவிட்டதாக தூதரக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சுவிட்சர்லாந்து (Switzerland), லிச்டேன்ஸ் (Liechtenstein), நெதர்லாந்து (Nederland), போலந்து (Poland ), ஸ்லோவேனியா( Slovenia), லக்ஷம்பேர்க் (Luxembourg), பெல்ஜியம் (Belgium) ஆகிய ஏழு நாடுகளுக்கான விசா வழங்கும் முடிவை கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகம் மட்டுமே தற்போது முடிவு செய்கின்றது.
புதிய நடை முறையின் படி கொழும்பில் உள்ள குளோபல் சேவிஸ் நிலையத்திடம் விசாவுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை விண்ணப்பதாரிகள் கையளிக்கவேண்டும்.
விண்ணப்பப் படிவம் கையளிப்பதற்கு முன்னர், அந்த நிலையத்தின் இணைய தளத்திற்க்குச் சென்று அதற்குரிய நாள் அனுமதியை பெறவேண்டும்.
நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ அனுமதி பெற முடியாது. அங்கு இலத்திரனியல் தொழில்நுட்ப இயந்திரத்தில் விண்ணப்பதாரிகளின் கைவிரல்கள் அடையாளம் பெறப்படும்.
அதன் பின்னர் அவர்களுடைய விண்ணப்பங்கள் சுவிஸ் தூதரகத்துக்கு அனுப்பப்படும். முடிவை சுவிஸ் தூதரகம் அறிவிக்கும் என்றும் அந்த நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
விசா மறுக்கப்பட்டால் முறையீடு செய்வதில் சிக்கல்!
விசா வழங்க மறுப்பு தெரிவித்தால் அதற்கு எதிரான ஆட்சேபனை மனுவை சுவிஸ் தூதரகத்துக்கு விண்ணப்பதாரிகள் தாக்கல் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஆட்சேபனை மனு ஜெர்மன், பிரஞ்சு அல்லது இத்தாலி மொழிகளில் மட்டுமே எழுதப்பட்டிருக்க வேண்டும்.
ஆங்கில மொழியில் எழுதும் மனு ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது என்று சுவிஸ் தூதரகம் தெரிவித்திருக்கின்றது.
இவ்வாறான மொழிப்பிரச்சினை காரணமாக பலர் குழப்பம் அடைந்திருக்கின்றனர் என்று அறியமுடிகின்றது.