சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான இரண்டு முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் 90 வீதம் முடிந்து விட்டதாகவும், அதன் விளைவுகளை அவர் விரைவில் எதிர்கொள்வார் என்றும், சிறிலங்கா அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக இரண்டு முறைப்பாடுகள் கிடைத்தன. முறைகேடான வகையில் சிறிலங்கா விமானப்படைக்கு, 7 மில்லியன் டொலர் செலவில், மிக் போர் விமானங்களைக் கொள்வனவு செய்தது முதலாவது முறைப்பாடு.
டி.ஏ.ராஜபக்ச நினைவிடத்தை புனரமைப்பதற்கு 90 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியது இரண்டாவது குற்றச்சாட்டு.
இந்த இரண்டு முறைப்பாடுகள் தொடர்பாகவும், நடத்தப்படும் விசாரணைகள் 90 வீதம் பூர்த்தியாகியுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அவர் விரைவில் பதிலளிக்க வேண்டும்.
எழுத்துமூலமான ஆதாரங்கள் ஆவணங்களின் அடிப்படையில் தான் நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் குறித்தும் ஊழல்கள் குறித்தும், விசாரிப்போம் என்று நாம் மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளோம்.
அதனைத் தான் நாம் செய்கிறோம். முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தனது குடும்பத்துக்கு வெள்ளையடிக்க முனைகிறார். அதற்கு காலம் தாமதமாகிவிட்டது.
சட்டத்தை மீறாத படையினர் எவரும் காணாமற்போனோர் பணியகத்தினால் இலக்கு வைக்கப்படமாட்டார்கள்.
இந்தப் பணியகம் வெளிநாட்டு சக்தியின் அழுத்தங்களுக்காக அமைக்கப்பட்டதல்ல.
சிறிலங்காவில் எல்லாமே வெளிப்படையாகவும், சட்டரீதியாகவும் நடைபெறுகிறது என்று அனைத்துலக சமூகத்துக்கு காட்டவே காணாமற்போனோர் பணியகம் அமைக்கப்பட்டது.
இதனை நாம், அனைத்துலக சட்டங்கள், மனித உரிமைச் சட்டங்களுக்கு மதிப்பளிப்பதாகவே பார்க்கிறோம்” என்றும் அவர் தெரிவித்தார்.