ஈழத் தமிழ் உறவுகளைக் கொன்று குவிக்க, ‘கிளஸ்டர்’ என்று சொல்லப்படும் கொத்துக்குண்டுகளை இலங்கை ராணுவம் பயன்படுத்தியிருப்பதை, உலகப் புகழ் பெற்ற பிரிட்டிஷ் நாளேடான ‘கார்டியன்’ அம்பலப்படுத்தியிருக்கிறது. ஆனையிரவு, பச்சிலைப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கொத்துக் குண்டுகளின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆதாரத்துடன் அதைச் செய்தியாக்கியிருக்கிறது, கார்டியன்.
சர்வதேச சமூகம் கொத்துக்குண்டுகளைத் தடை செய்து நீண்ட காலமாகிவிட்டது. தடை செய்யப்பட்ட அந்தப் பல்லுயிரழிப்பானைத்தான் ஈவிரக்கமின்றி பயன்படுத்தியது இலங்கை. கொத்துக்குண்டுகள் போடப்பட்டதாக, 2009லிருந்தே தமிழ்ச் சமூகம் குற்றஞ்சாட்டி வருகிறது. இலங்கை அதை மறுத்தது. இப்போது, கார்டியன் செய்திமூலம் உண்மை வெளியாகியிருக்கிறது.
விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட நமது உறவுகள், ஒருவர் இருவரல்ல, ஒன்றரை லட்சம் பேர். அவர்களுக்காகப் பெற்றாக வேண்டிய நீதி தொடர்பிலும், பௌத்த சிங்கள மிருகங்கள் நடத்திய திட்டமிட்ட இனப்படுகொலையை அம்பலப்படுத்துதல் தொடர்பிலும், தமிழ் ஊடகங்கள் பேய்த்துயிலில் ஆழ்ந்திருக்கிற நிலையில், கார்டியன் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. கார்டியனைப் பார்த்தேனும் நமது ஊடகங்கள் திருந்துமென்று நினைக்கிறீர்களா? வாய்ப்பேயில்லை.
ஊடகங்களை விடுங்கள், நமக்கும் வெட்கமில்லை. எந்தக் கள்ளக் காதலிக்காக இந்தக் கள்ளக் காதலி வெட்டிக் கொல்லப்பட்டாள் – என்பதையெல்லாம் விலாவாரியாக விவரித்துவிட்டு, நெற்றியில் ‘வெல்க தமிழ்’ என்று எழுதி ஒட்டிக்கொண்டுவிட்டால், ‘இன்னா தமிள்ப்பற்று மாமே’ என்று விழிவிரிக்கிற அறிவிலிகளாகவே இருக்கிறோம் இன்றுவரை! தமிழன் தோற்றுக் கொண்டிருக்க தமிழ் வென்று விடுமாமா?
துரோகம்…. துரோகம்…. துரோகம்…. அதுதான் நிழலைப் போலவே தொடர்ந்து வருகிறது நம்மை! ஒன்றரை லட்சம் உயிர்களுக்கு நீதி கேட்டு, நீங்களோ நானோ மட்டுமல்ல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வர் குரல்கொடுத்தால் கூட கடித்துக் குதறக் காத்திருக்கிறார்கள் இலங்கையின் ஏஜென்டுகள்.
திருச்சியில் நடந்த கூட்டத்தில், ‘இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை அவசியம்’ என்று முதல்வர் ஜெயலலிதா பேசியதை, ஏஜென்டுகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ‘வெட்டிப் பேச்சு பேசாமல், தமிழ்மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் விதத்தில் வடகிழக்கில் முதலீடு செய்யக் கூடாதா’ என்றெல்லாம் போதிக்கிறார்கள். (சுப்பிரமணியன்சுவாமி என்கிற நேரடி ஏஜென்ட் இருக்கிற நிலையில், இவர்கள் யார்? சப்-ஏஜென்டுகளா?)
2011 வரை பதவியில் ‘ஒட்டிக்கொண்டிருந்த’ முதல்வர் கருணாநிதியும், துணை முதல்வர் ஸ்டாலினும், ‘இனப்படுகொலை’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்தவே பயந்து நடுங்கியதை நாம் மறந்துவிடவில்லை. கலைஞரைத் தொடர்ந்து முதல்வரான ஜெயலலிதா, இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் தீர்மானத்தை சட்டப் பேரவையிலேயே நிறைவேற்றினார். அதைப்பார்த்து, பௌத்த சிங்களப் பொறுக்கிகள் எந்த அளவுக்குக் கடுப்பானார்கள் என்பதற்கு, சிங்களப் பத்திரிகையான ‘திவயின’ வெளியிட்ட கார்ட்டூனே சாட்சி!
இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் தீர்மானம், தமிழக சட்டப் பேரவையில்தான் முதல் முதலாக நிறைவேற்றப்பட்டது. வட மாகாண சபையும், அப்படியொரு தீர்மானத்தை அதன்பின் நிறைவேற்றியது. இனப்படுகொலை நடந்த மண்ணிலிருந்து விக்னேஸ்வரனும், 26வது மைலிலிருந்து ஜெயலலிதாவும் குரல் கொடுக்காமலிருந்திருந்தால், நீதி எப்போதோ குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருக்கும்.
இனப்படுகொலையை மூடிமறைக்கிற முயற்சியில் இலங்கைக்குத் துணைபோகிற துரோகிகள், தமிழ்ச் சமூகத்தில் பரவலாகக் காணப்படுகின்றனர். அவர்கள்தான், ‘நடந்தது இனப்படுகொலையென்று சொல்வது ராஜதந்திரமில்லை’ என்று போதித்தவர்கள்….. ஆட்சி மாறிவிட்டது, அமைதியாயிருங்கள் – என்று வலியுறுத்தியவர்கள். இவர்களது துரோகத்தை முறியடிக்கிற வரை, கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் பேருக்கு நீதி கிடைப்பது சாத்தியமேயில்லை.
ஒன்றரை லட்சம் உயிர்களுக்குத் துரோகம் செய்யும் இவர்கள், இந்தியாவில் மட்டுமில்லை, புலம்பெயர் நாடுகளிலும் இருக்கிறார்கள். தாயக மண்ணிலும் இவர்களைப் பார்க்க முடிகிறது.
காட்டிக்கொடுப்பவர்களின் இடுப்பெலும்பை உடைத்தெறியும் வாய்ப்பு இப்போது நமக்குக் கிடைத்திருக்கிறது. அது, ஈழத் தமிழர் – தமிழகத் தமிழர் ஒருங்கிணைப்பு. ஜெயலலிதா மீண்டும் முதல்வரானதற்கு வாழ்த்துத் தெரிவித்த விக்னேஸ்வரன், தமிழக முதல்வரைச் சந்திக்க விரும்புவதாகக் குறிப்பிட்டிருப்பது, ஓர் அர்த்தமுள்ள சமிக்ஞை.
இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் குரலை வலுப்படுத்த, இந்த வாய்ப்பைத் தமிழக முதல்வர் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். விக்னேஸ்வரனைத் தமிழ்நாட்டுக்கு அழைக்க, இது பொருத்தமான நேரம். தாமதமின்றி அவரை அழைக்கவேண்டும். இனப்படுகொலை தொடர்பான நீதியை விரைவில் பெறுவதற்கான வியூகங்கள் குறித்து ஆலோசிக்க வேண்டும். இரண்டு முதலமைச்சர்களும் சந்தித்தாலே போதும், இலங்கையின் நயவஞ்சகமும், கூடவே இருந்து குழிபறிப்போரின் துரோகமும் காலாவதியாகிவிடும்.
நீதி கேட்பவர்கள் இலங்கையின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் – என்கிற பிரச்சாரம் திட்டமிட்டு நடக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதற்கும், இலங்கையின் வளர்ச்சிக்கும் என்ன தொடர்பிருக்கிறது? எல்லா நாடுகளும், வளர்ச்சியை நோக்கிச் செல்லவே விரும்புகின்றன. எந்த நாடாவது நீதிமன்றங்களை மூடியிருக்கிறதா?
2 முதல்வர்களும் சேர்ந்து களமிறங்கினால், ஒன்றரை லட்சம் உயிர்களுக்கு உடனடியாக நீதி கிடைக்கும். “அப்பாவி மக்களுக்கு நீதி மறுக்கப்பட்டு, குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருந்தால், நல்லிணக்கம் எப்படி உருவாகும்” என்று விக்னேஸ்வரன் சொல்வதைத் தமிழகம் வழிமொழிய வேண்டும்.
கொத்துக்குண்டுகளை இலங்கை பயன்படுத்தியிருப்பது அம்பலமாகியுள்ள நிலையில், ‘சர்வதேச நீதிபதிகளையும் உள்ளடக்கிய நீதிமன்றம்தான் தேவை’ என்று நமது முதல்வர்கள் சேர்ந்து குரல்கொடுத்தால்தான், மின்சார நாற்காலியை நோக்கி குற்றவாளிகளை நகர்த்த முடியும்.
– புகழேந்தி தங்கராஜ்!