சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற, அந்த நாடு இன்னும் அதிகம் செய்ய வேண்டியிருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தினால் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டுள்ள, மனித உரிமைகள் முன்னுரிமை பற்றிய நாடுகளின் அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் ஜூன் வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்து வரவேற்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அண்மைய மாதங்களாக அதிகரித்துள்ள சிங்கலே போன்ற தேசியவாதப் பரப்புரைகள் குறித்து பிரித்தானியா கவலை எழுப்பியுள்ளது.
சித்திரவதைகள் தொடர்பான விவகாரத்தில், கடந்த ஏப்ரல் மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ஜுவான் மென்டெசின் பரிந்துரைகளை சிறிலங்கா நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
சித்திரவதைகள் உள்ளிட்ட தீவிரமான மனித உரிமை மீறல்களைக் குறைக்கும் நோக்கிலும், சட்டத்தின் ஆட்சி மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும், நிபுணத்துவம் வாய்ந்த பொறுப்புக்கூறும் காவல்துறையின் ஆற்றலை அபிவிருத்தி செய்யவும், சிறிலங்காவுக்கு உதவ பிரித்தானியா தயாராக உள்ளது.
மேலும் காணிகளை விடுவிக்கவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள நிலையிலும், சில பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்வில் இருந்து சிறிலங்கா படையினரை விலக்கும் அறிகுறிகள் தென்பட்டாலும், வடக்கு கிழக்கில் இன்னமும் சவால்கள் தொடர்கின்றன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காணிகளை விடுவித்து வடக்கில் இருந்து படைகளைக் குறைப்பதை தீவிரப்படுத்துமாறு பிரித்தானியா தொடர்ந்து வலியுறுத்துகிறது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி அனைத்துலக தரம்வாய்ந்த, சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துமாறு சிறிலங்காவிடம் வலியுறுத்துகிறது பிரித்தானியா.
அதேவேளை, நீண்டகாலப் போரில், முக்கிய பங்காற்றியுள்ள சிறிலங்கா இராணுவம், மனித உரிமைகள் உள்ளிட்ட நல்லிணக்கச் செயற்பாடுகளிலும் கடப்பாடுகளைக் கொண்டிருக்கிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.