ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகளுக்கும், ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கும் முறையிடவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவொன்று ஜெனிவா செல்லவுள்ளது.
இதன்போது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரைச் சந்தித்து சிறிலங்கா, தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளமை குறித்து எடுத்துக் கூறப்படும்.
கடந்த ஆண்டு ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சிறிலங்கா பல வாக்குறுதிகளை அளித்திருந்தது.
எனினும், வடக்கில் இராணுவம் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை இன்னமும் விடுவிக்காமை, அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற பல வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டவுள்ளதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.