வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவது தொடர்பாக, முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு அதிகாரிகள், மற்றும் அமைச்சுக்களின் செயலர்களுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று பேச்சுக்களை நடத்தினார்.
சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நேற்று மாலை இந்தக் கூட்டம் இடம்பெற்றது.
சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ, கூட்டுப்படைகளின் தளபதி எயர் சீவ் மார்ஷல் கோலித குணதிலக, சிறிலங்கா இராணுவம், கடற்படை, விமானப்படைத் தளபதிகள், சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
வடக்கு, கிழக்கில் சிறிலங்கா படையினர் வசமுள்ள தனியார் காணிகளை ஒப்படைப்பது மற்றும் இடம்பெயர்ந்துள்ள மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
27 ஆண்டுகளாக தமது காணிகளை மீளப் பெறுவதற்காக எதிர்பார்த்திருக்கும், தமிழர்களுக்கு அவர்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கடந்த வாரம் ஜப்பான் சென்றிருந்த போது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
அத்துடன், வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களை அடுத்த ஆறு மாதங்களுக்குள் மீளக் குடியமர்த்துவதாக, கடந்த ஜனவரி மாதம் தைப்பொங்கல் விழாவுக்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த போது சிறிலங்கா அதிபர் வாக்குறுதி அளித்திருந்தார்.
அண்மையில் காங்கேசன்துறையில் உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகள் சிலவற்றை விடுவிக்கும் நிகழ்வில், தனது வாக்குறுதியை நினைவுபடுத்தியிருந்த அவர், வரும் ஜூன் மாதம்,தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாகவும் கூறியிருந்தார்.
நாளை ஜூன் மாதம் பிறக்கவுள்ள நிலையிலேயே, சிறிலங்கா அதிபர் இந்தக் கூட்டத்தை நடத்தியுள்ளார்.