சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பாக, சிறிலங்கா இராணுவத்திடம் உள்ள அனைத்து ஆவணங்கள் மற்றும் தகவல்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று கல்கிசை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
கடந்த 2009ஆம் அண்டு ஜனவரி 8ஆம் நாள் கொழும்பில் வைத்து லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்த படுகொலை தொடர்பான குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையிலேயே, நேற்று இந்த வழக்கு கல்கிசை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்பட்ட விசாரணை பற்றிய ஆவணங்கள், மற்றும் இதுபற்றி சிறிலங்கா இராணுவத்திடம் உள்ள தகவல்கள் அனைத்தையும், குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.