தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அனைத்துலக சமூகத்துக்கு அம்பலப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் இன்று ‘எழுக தமிழ்’ எழுச்சி நிகழ்வு நடைபெறவுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், நடைபெறவுள்ள இந்த நிகழ்வுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், பொது அமைப்புகளும், ஆதரவு தெரிவித்துள்ளன.
தமிழர் தாயகத்தில் இடம்பெறும் பௌத்த மயமாக்கலை எதிர்த்தும், சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், காணாமற்போனோர் விவகாரம் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை நடத்தக் கோரியும், சிறிலங்கா படையினர் வசமுள்ள காணிகளை ஒப்படைக்கக் கோரியும், இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியமர்வை வலியுறுத்தியும், படைக்குறைப்பை வலியுறுத்தியும், அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்துமாறு கோரியும் இந்த எழுச்சி நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 9 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றில் மற்றும் யாழ்.பல்கலைக்கழக முன்றில் ஆகிய இடங்களில் இருந்து இரண்டு பேரணிகள் புறப்பட்டு, இலுப்பையடிச் சந்தியில் ஒன்றிணையும். பின்னர் இந்தப் பேரணி, யாழ் முற்றவெளி திறந்தவெளி அரங்கைச் சென்றடையும்.
அங்கு பாரிய எழுச்சி நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் பிரமுகர்கள் உரையாற்றவுள்ளனர்.
‘எழுக தமிழ்’ எழுச்சி நிகழ்வுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆதரவு தெரிவிக்க மறுத்துள்ளது.
எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள புளொட், ஈபிஆர்எல்எவ், ரெலோ ஆகிய கட்சிகளும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈபிடிபி ஆகிய கட்சிகளும், பல்வேறு பொது அமைப்புகளும் இந்த நிகழ்வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த நிகழ்வு அரசியல் சார்பற்ற வகையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஜனநாயக ரீதியாக உலகறியச் செய்யும் வகையில், அமைதியான முறையில் இடம்பெறும் என்று தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது.