யாழ்.பல்கலைக்கழகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மோதலுக்குக் காரணமான மாணவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்காவின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொகான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
“இந்தச் சம்பவம் தொடர்பான சிறிலங்கா காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மோதலில் தொடர்புடைய மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுப்பதற்கான, ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுக்குமாறு யாழ். பல்கலைக்கழக துணைவேந்தருக்கு பணிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொளிப் பதிவுகள் எம்மிடம் உள்ளன. மோதல்கள் பல்கலைக்கழகத்துக்குள் நடந்தாலும் சரி, வெளியே அதன் சுற்றுப்புறத்தில் நடந்தாலும் சரி, அது ஒரு குற்றமே.
காணொளி ஆதாரங்களின் அடிப்படையில், இந்த மோதல்களில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சிறிலங்கா அதிபருக்கும், பிரதமருக்கும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்த உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இதுபற்றிக் கேள்விப்பட்டு, என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரங்கள் கேட்டறிந்தார். அவர் நாடு திரும்பியதும் விபரமாக விளக்கம் அளிக்கப்படும்.
சிறிலங்கா அதிபரின் செயலர் மற்றும் உயர் கல்வி அமைச்சின் செயலருடன் தொடர்பில் இருக்கிறேன். இது தொடர்பாக உயர்கல்வி அமைச்சின் ஊடாக பிரதமருக்கு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்தார்.