சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற அம்பாந்தோட்டையில் சங்கிரி-லா நட்சத்திர விடுதி திறப்பு விழாவில் இடம்பெற்ற தீவிபத்துத் தொடர்பாக உயர்மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விசாரணைகளின் போது, சங்கிரி-லா விடுதியின் பாதுகாப்பு ஆலோசகரான முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண தொடர்பாகவும் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.
மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண இராணுவப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளராக இருந்து, பின்னர், மகிந்த ராஜபக்சவின் பதவிக்காலத்தில் அரச புலனாய்வுப் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
மகிந்த ராஜபக்ச அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததும் இவர் அந்தப் பதவியில் இருந்த விலகிய நிலையில், தற்போது அவர் சங்கிரி- லா விடுதியின் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடு இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வானவேடிக்கைகளை நடத்த வேண்டாம் என்று, கடந்த புதன்கிழமை மாலை இடம்பெற்ற இந்த விடுதியின் திறப்பு விழாவுக்கு முன்னதாக, சிறிலங்கா அதிபர் செயலகம் ஆலோசனை கூறியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், சிறிலங்கா அதிபர் நிகழ்வில் பங்கேற்றிருந்த போது, பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வானவேடிக்கை நடத்தப்பட்டது.
கடும் காற்றினால் பறந்த தீப்பொறிகள் பட்டு, அங்கு அமைக்கப்பட்டிருந்த குடில் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. சிறிலங்கா அதிபர் நடன நிகழ்வு ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்த போதே- அவருக்கு 50 மீற்றர் தொலைவில் இந்த தீவிபத்து ஏற்பட்டது.
இதையடுத்து அவர், பாதுகாப்பாக விடுதிக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். சிறிலங்கா அதிபரின் பாதுகாப்பு அணியில் இடம்பெற்றிருந்த தீயணைப்பு வாகனம் ஒன்றே தீயை அணைக்கப் பயன்படுத்தப்பட்டது.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறப்பு காவல்துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்தப் பகுதியில் வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் மாதிரிகளையும் காவல்துறையினர் சேகரித்துள்ளனர்.
சிறிலங்கா அதிபர் பங்கேற்ற நிகழ்வில் பாதுகாப்புக் குறைபாடு தொடர்பாக விரிவான விசாரணைகள் இடம்பெறும் என்றும், இதன்போது விடுதியின் பாதுகாப்பு ஆலோசகரும், முன்னாள் அரசபுலனாய்வுத் துறைத் தலைவருமான மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண குறித்தும் விசாரணைகள் நடத்தப்படவுள்ளனர்.